UPDATED : டிச 30, 2024 11:29 PM
ADDED : டிச 30, 2024 11:21 PM

சென்னை : பெற்றோர் எதிர்ப்பு காரணமாக, காதலை கைவிட்ட காதலியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வாலிபர் சதீஷுக்கு மரண தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
சென்னை ஆலந்துார் போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் சொந்தமாக கார் வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தார். இவரது மனைவி ராமலட்சுமி; ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்தார்.
இவர்களது மூத்த மகள் சத்யா, 20; தி.நகரில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.சி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ., தயாளனின் மகன் சதீஷ், 31, என்பவரை காதலித்து வந்தார்.
கண்டித்தனர்
டிப்ளமா படிப்பை முடித்த சதீஷ், எந்த வேலையும் செய்யாமல் சுற்றியுள்ளார். இதன் காரணமாக, சதீஷை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என, சத்யாவை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதையடுத்து, சதீஷ் உடனான காதலை சத்யா கைவிட்டார்.
இதில் மனமுடைந்த சதீஷ், சத்யாவிடம் தன் காதலை ஏற்க வைக்க போராடினார். போராடியும் முடியாத நிலையில், 2022 அக்., 13ல் கல்லுாரி செல்ல, பரங்கிமலை ரயில் நிலையத்தில் முதல் பிளாட்பார்மில் காத்திருந்த சத்யாவை சந்தித்தார்.
அப்போதும் காதலை ஏற்குமாறு அவரிடம் கெஞ்சியுள்ளார். பெற்றோர் அறிவுரையை மீற முடியாது என சத்யா சொன்னதும் ஆத்திரமடைந்த சதீஷ், அவ்வழியே வந்த ரயில் முன் சத்யாவை தள்ளி விட்டார். இதில், படுகாயம் அடைந்த சத்யா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையறிந்ததும், துக்கம் தாங்காமல் அன்றைய தினமே, மாணவியின் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மகள் கொலையான சில மணி நேரத்தில் தந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, கொலை வழக்குப் பதிவு செய்த மாம்பலம் ரயில்வே போலீசார், சதீஷை கைது செய்தனர்.
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சத்யா கொலை வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சத்யாவின் தாய், மகள் இறந்த சோகத்தில் இருந்த நிலையில் உயிரிழந்தார்.
கொலை, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வந்தனர்.
விசாரணை முடிந்த நிலையில், வழக்கின் விசாரணை அதிகாரியான சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் கே.ரம்யா, கடந்தாண்டு ஜன., 11ல் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சதீஷ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
பின், கடந்தாண்டு மார்ச்சில் இந்த வழக்கு, சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
கேள்வி எழுப்பினார்
இந்த வழக்கை, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி விசாரித்து வந்தார். அரசு தரப்பு சாட்சிகள், 70 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
போலீசார் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் ஏ.எம்.ரவீந்திரநாத் ஜெயபால், ''சதீஷ் மீதான குற்றச்சாட்டு கடுமையானது என்பதால், அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்,'' என வாதாடினார்.
வழக்கில் அனைத்து தரப்பு விசாரணை நிறைவடைந்த நிலையில், சதீஷ் குற்றவாளி என்றும், அவருக்கான தண்டனை விபரங்கள், டிச., 30ல் அறிவிக்கப்படும் என்றும், கடந்த 27ல் நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி அறிவித்திருந்தார். அதன்படி, நேற்று தண்டனை விபரங்களை அறிவிக்க, வழக்கு பட்டியலிடப்பட்டது.
புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட சதீஷ், மதியம் 1:20 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் தண்டனை குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு சதீஷ், வயதான பெற்றோரை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளதால், குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அபராதம்
இதையடுத்து, பிற்பகல் 3:30 மணிக்கு தண்டனை விபரத்தை, நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி அறிவித்தார்.
பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், சதீஷுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்தார்.
இந்திய தண்டனை சட்டம், 302-வது பிரிவின் கீழ் -கொலை குற்றத்திற்கு மரண தண்டனையும், 25,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.
இந்த தீர்ப்பை கேட்டதும் சதீஷ் கண்ணீர் விட்டார். பின், அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்து சென்றனர்.
விரைவில் தீர்ப்பு
* சதீஷ் கைதானதில் இருந்து, தீர்ப்பு கூறப்படும் வரை சிறையில் தான் இருந்துள்ளார்
* சம்பவம் நடந்து முடிந்து, மூன்று மாதங்களுக்குள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது
* விசாரணை துவங்கி ஓராண்டு எட்டு மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
'பாடமாக இருக்கும்'
சிறப்பு அரசு வழக்கறிஞர் ஏ.எம்.ரவீந்திரநாத் ஜெயபால் கூறியதாவது: இந்த வழக்கை பொறுத்தவரை, குற்றவாளி சதீஷ், ரயில் முன் சத்யாவை தள்ளிவிட்டது மட்டுமின்றி, அவர் இறந்து விட்டாரா என உறுதி செய்த பின், அங்கிருந்து தப்பியோடி உள்ளார் என்பது போன்ற சாட்சியங்கள், வழக்கில் அதிகபட்ச தண்டனை கிடைக்க பேருதவியாக இருந்தன.
பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு, இந்த வழக்கின் தீர்ப்பு, ஒரு பாடமாக இருக்கும். வழக்கில் அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். குறிப்பாக, சாட்சிகள், குறுக்கு விசாரணை உள்ளிட்டவற்றை கவனமாக கையாண்டோம். அரிதிலும் அரிதான வழக்குகளில் தான், துாக்கு தண்டனை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இந்த வழக்கில் குற்றவாளியான சதீஷுக்கு, நீதிபதி மரண தண்டனை விதித்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.
இன்னும் மீளவில்லை
உயிரிழந்த சத்யாவின் தாய்மாமா சீனிவாசன் கூறுகையில், ''சத்யாவை இழந்த துயரத்தில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை. சத்யாவின் தந்தை, தாய் மறைவும், எங்களை மிகுந்த கவலையில் ஆழ்த்தியது.''இச்சூழலில் குற்றவாளி சதீஷுக்கு மரண தண்டனை அளித்திருப்பது, ஓரளவு மனநிறைவையும், ஆறுதலையும் அளித்துள்ளது,'' என்றார்.