ADDED : ஜூன் 18, 2025 11:01 PM
சென்னை:'என்னை அச்சுறுத்த, வீட்டிற்கு வந்து சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் முத்துரமேஷ், 'ஆன்லைன்' வாயிலாக, போலீசில் புகார் அளித்துள்ளார்.
துாத்துக்குடி மாவட்டம், பெரியதாழை பகுதியில், கடந்த 15ம் தேதி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பனை மரத்தில் ஏறி, கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதில், தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் முத்துரமேஷ் பங்கேற்றார். இப்போராட்டத்தை கண்டித்து, தமிழ்நாடு பனை வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் அறிக்கை வெளியிட்டார். இதற்கு முத்துரமேஷ் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், மர்ம நபர்கள் சிலர், முத்துரமேஷ் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அவர் வீட்டில் இல்லை. இதுகுறித்து ஆன்லைன் வழியே, போலீசில் முத்துரமேஷ் புகார் செய்துள்ளார். அதில், 'எர்ணாவூர் நாராயணன் ஆதரவாளர்கள், என்னை அச்சுறுத்த, வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர். தமிழக காவல் துறை, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முத்துரமேஷ் வீட்டிற்கு சமூக விரோதிகள் சென்று மிரட்டி உள்ளனர். இது கண்டனத்துக்கு உரியது என, சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

