மணிக்கு மணி உயரும் சாவு எண்ணிக்கை: இதுவரை பலி 52: கதற வைக்குது கள்ளச்சாராய சோகம்
மணிக்கு மணி உயரும் சாவு எண்ணிக்கை: இதுவரை பலி 52: கதற வைக்குது கள்ளச்சாராய சோகம்
UPDATED : ஜூன் 22, 2024 07:17 AM
ADDED : ஜூன் 21, 2024 12:50 PM

சேலம்: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சேலம் அரசு மருத்துவமனையில் பெண் உட்பட 2 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 52 ஆக அதிகரித்தது. இறந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுகின்றனர்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 150க்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கு, கண்பார்வை குறைவு மற்றும் காது கேளாமையால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 17 பேர் நேற்று முன்தினம்( ஜூன் 19), நேற்று 23 பேர் இறந்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலர் அபாய கட்டத்தில் உள்ளதால், அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். இதனால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. இன்று (ஜூன் 21) காலை நிலவரப்படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 28 பேர், புதுச்சேரி ஜிப்மரில் 3 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் 17 பேர், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேர் உட்பட 52 பேர் உயிரிழந்தனர்.
கள்ளச்சாராயம் குடித்தவர்கள் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவர்களும், புதுச்சேரி ஜிப்மர், கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனால், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளது. அதில் 21 பேரது நிலைமை கவலைக்கிடமாக தெரிகிறது. இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.