/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் ஸ்ரீ மகா பெரியவா ஆராதனை விழா
/
மதுரையில் ஸ்ரீ மகா பெரியவா ஆராதனை விழா
ADDED : டிச 12, 2025 02:28 PM

மதுரை : காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவரின் ஆராதனை விழா, மதுரையில் வருகிற 16ஆம் தேதி தொடங்கி, மூன்று நாட்கள் நடக்க உள்ளது.
ஸ்ரீ மஹாபெரியவர் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி மஹா ஸ்வாமிகளின் 31வது ஆராதனையை ஒட்டி, மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் ஸ்ரீ மகா பெரியவா ஆராதனை விழா நடக்கிறது. எஸ்.எஸ்.காலனி, பிராமண கல்யாண மண்டபத்தில் டிச.16, (செவ்வாய்) காலை 8 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குகிறது.
மூன்று நாட்கள் நடக்கும் நிகழ்வில், முதல் நாள் காஞ்சி ஸ்ரீ மஹாபெரியவரின் விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு அபிஷேக ஆராதனைகள், ஹோமங்கள், மஹன்யாசம், ருத்ராபிஷேகம் நடைபெறுகிறது. பின், பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், 'ஸ்ரீ மகா பெரியவா விருது'களை வழங்குகிறார்.
தொடர்ந்து ஆய்க்குடி குமார் குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் ஸ்ரீ மகா பெரியவா படம், அன்ன பிரசாதம், ஸ்படிக மாலை பிரசாதம் வழங்கப்படுகிறது.
அனுஷம் உற்சவம்
டிச.17, மாலை 6 மணிக்கு எஸ்.எஸ்.காலனி, எஸ்.எம்.கே. திருமண மண்டபத்தில் பட்டிமன்ற பேச்சாளர் புலவர் ராமலிங்கம் 'குருவே சரணம்' எனும் தலைப்பில் பேசுகிறார். டிச.18, வியாழனன்று காஞ்சி ஸ்ரீ மகா பெரியவரின் அனுஷம் உற்சவம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு, மகா பெரியவர் விக்ரகம் மற்றும் வெள்ளி பாதுகைக்கு அபிஷேக ஆராதனைகள், புஷ்பாஞ்சலி, மஹா தீபாராதனை நடக்கிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை 'மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம்' நிறுவனர் நெல்லை பாலு செய்துள்ளார்.

