டிச.,18ம் தேதி ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பிரசாரம்; செங்கோட்டையன் தகவல்
டிச.,18ம் தேதி ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பிரசாரம்; செங்கோட்டையன் தகவல்
ADDED : டிச 12, 2025 12:19 PM

ஈரோடு: வரும் டிசம்பர் 18ம் தேதி ஈரோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொள்ள இருப்பதாக அக்கட்சியின் மேற்கு மண்டல பொறுப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அவர் பேசியதாவது; வரும் 18ம் தேதி தவெக தலைவர் விஜய் ஈரோடு வருகிறார். காலை 11 மணியில் இருந்து 1 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். அரசு அதிகாரிகள் ஆலோசனைகளைக் கேட்டு இந்த நிகழ்ச்சியை நடத்த இருக்கிறோம். புதுச்சேரிக்குப் பிறகு, முதல்முறையாக தமிழகத்தில் பிரசாரம் செய்ய இருக்கிறார். விஜய் தான் வரும் கால முதல்வர் என்பதை ஏற்றுக்கொண்டு, கட்சியில் இணைய வருபவர்களை வரவேற்போம் உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நேற்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டணியில் யாரை வைக்க வேண்டும் என்பதை தலைவர் முடிவு செய்வார். நேற்றைய கூட்டத்தில் தவெகவில் பல பேர் இணையும் வாய்ப்பு இருக்கிறது என்று தான் சொன்னேன். தவெக அதிமுகவாக மாறும் என்று நான் சொல்லவில்லை. அனைவரையும் இணைப்போம், அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்.
அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. அது தனி. இப்போது நான் விருப்பப்பட்டு, தவெகவில் இணைந்து விட்டேன். எம்ஜிஆர் காலத்திலேயே உயர்மட்ட குழு வரையில் இருந்தவன். புதிதாக வந்தவர்கள் என்னை உறுப்பினராக நீக்க முடியாது. என்னை அரவணைத்து செல்லும் இயக்கத்தில் சேர்ந்ததில் எந்த தவறும் இல்லை.
எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்த போது அதிமுகவில் எப்படி இருந்தனோ, அது போன்று தான் தவெகவில் தற்போது இருக்கிறேன், இவ்வாறு அவர் கூறினார்.

