1,700 ஏக்கருக்கு பதில் 870 ஏக்கரில் அறிவுசார் நகரம் அமைக்க முடிவு
1,700 ஏக்கருக்கு பதில் 870 ஏக்கரில் அறிவுசார் நகரம் அமைக்க முடிவு
ADDED : மே 30, 2025 12:07 AM
சென்னை:தமிழக இளைஞர்களுக்கு, சர்வதேச தரத்தில் கல்வி, வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடு போன்றவை கிடைக்க, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகில், 1,700 ஏக்கரில் அறிவுசார் நகரம் அமைக்க, 'டிட்கோ' எனப்படும், தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அங்கு, உலகின் பல்வேறு நாடுகளில், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள், மத்திய, மாநில அரசுகளின் பல்கலை, கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் தங்களின் கிளைகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் போன்றவற்றை அமைக்கலாம். இதனால், உலகில் புதிதாக வரும் தொழில்நுட்பங்களை, தமிழக இளைஞர்கள் விரைவாக அறிய முடியும்.
அதற்கு ஏற்ப திறன்களை வளர்த்துக் கொண்டு, வேலை வாய்ப்பை பெறலாம். அறிவுசார் நகரத்திற்கு, ஊத்துக்கோட்டை அருகில் செங்காத்துக்குளம், மேல்மலிகைப்பட்டு கிராமங்களில், 870 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே திட்டமிட்ட, 1,700 ஏக்கருக்கு பதில், 870 ஏக்கரில் அறிவுசார் நகர் அமைக்க, டிட்கோ முடிவு செய்துள்ளது.
அங்கு இரண்டு, மூன்று கட்டங்களாக நிலத்தை மேம்படுத்தி, தொழில் துவங்க வரும் கல்வி நிறுவனங்களுக்கு, மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. முதற்கட்டமாக நிலத்தை மேம்படுத்தும் பணி, விரைவில் துவக்க உள்ளது.