4 தனியார் மருத்துவமனைகளில் எய்ட்ஸ் நோய்க்கு இலவச சிகிச்சை நோயாளிகளை மருத்துவ பயனாளர்கள் என அழைக்க முடிவு
4 தனியார் மருத்துவமனைகளில் எய்ட்ஸ் நோய்க்கு இலவச சிகிச்சை நோயாளிகளை மருத்துவ பயனாளர்கள் என அழைக்க முடிவு
ADDED : செப் 11, 2025 01:51 AM
சென்னை:''எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களுக்கு, நான்கு தனியார் மருத்துவ மனையில், கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்படும். மருத்துவமனைகளுக்கு வருவோரை, மருத்துவ பயனாளர்கள் என்று அழைக்க, விரைவில் அரசாணை வெளியிடப்படும்.,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில், எச்.ஐ.வி., - எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று குறித்த, 'தீவிர விழிப்புணர்வு பிரசாரம் - 2025' துவக்க நிகழ்வு, சென்னையில் நேற்று நடந்தது. அப்போது அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
தமிழகத்தில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் பாதிப்புகளால், ஒரு லட்சத்து, 39,350 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்திய அளவில் எச்.ஐ.வி., பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, 0.23 சதவீதம். தமிழகத்தில், 0.16 சதவீதமாக உள்ளது. வரும், 2030க்குள் எய்ட்ஸ் தொற்றில்லா தமிழகத்தை உருவாக்குவோம்.
தற்போது, தனியார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், கட்டணமில்லாமல் எச்.ஐ.வி., - எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோயாளிகளுக்கு, பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
இதில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, கன்னியாகுமரி மெடிக்கல் மிஷன், ஈரோடு நந்தா மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, திருவள்ளூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி மருத்துவமனை ஆகியவை இணைந்துள்ளன.
இவற்றில், எய்ட்ஸ் நோயாளிகள் இலவசமாக சிகிச்சை பெறலாம். தமிழகத்தில் மருத்துவ மனைகளுக்கு வருவோரை, மருத்துவ பயனாளர்கள் என்று அழைக்க, விரைவில் அரசாணை வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.