ADDED : பிப் 16, 2024 12:44 AM
சென்னை:''அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளிலும், மரக்கன்றுகள் நடப்படும்,'' என, அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
தி.மு.க., - பூண்டி கலைவாணன்: திருவாரூர் மாவட்டத்தில், பள்ளி, கல்லுாரிகளில் மரங்கள் வளர்க்க வேண்டும். திருவாரூர் மத்திய பல்கலை வளாகத்தில், பொது நல ஆர்வலர்கள், பொது மக்கள், அங்குள்ள காட்டு கருவேல மரங்களை அகற்றி உள்ளனர். அப்பகுதியிலும், பள்ளி, கல்லுாரியிலும், மரக்கன்றுகள் நட வேண்டும்.
அமைச்சர் மெய்யநாதன்: திருவாரூர் மத்திய பல்கலையில், 75 லட்சம் ரூபாயில், மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகின்றன. 'பசுமைப் பள்ளி' என்ற திட்டத்தை, முதல்வர் துவக்கி உள்ளார்.
ஒவ்வொரு பள்ளிக்கும், 20 லட்சம் ரூபாய் செலவில், பள்ளி வளாகம் முழுதும் மரங்கள் நடுவது, மூலிகை, காய்கறி தோட்டம் வைப்பது, பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றுவது, மழைநீர் சேகரிப்பு ஏற்படுத்துவது என்ற முன்மாதிரி திட்டம் இது.
முதலில், 25 பள்ளிகளில் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டு, 100 பள்ளிகளில் நிறைவேற்றப்பட உள்ளது. மேலும், 'பசுமைத் தமிழகம்' என்ற திட்டத்தில், ஆண்டுக்கு 10 கோடி மரங்கள் நடப்படுகின்றன. வரும் நிதியாண்டில், திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லுாரிகள் மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளிலும் மரக்கன்றுகள் நடப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.