ADDED : மே 29, 2025 01:19 AM

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில், 2.21 அரிசி கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் இலவச அரிசி வழங்கப்படு கிறது. இதில், 1.11 கோடி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா கார்டுதாரர்களுக்கான, 2.05 லட்சம் டன் அரிசியையும், 8,576 டன் கோதுமையையும் தமிழகத்திற்கு இலவசமாக, மத்திய அரசு வழங்குகிறது.
நாடு முழுதும் கடந்த சீசனில் விவசாயிகளிடம் இருந்து அரிசி, கோதுமை அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. அவற்றின் வரத்து அதிகம் இருப்பதால், கிடங்குகளில் சேமித்து வைப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எனவே, முன்னுரிமை, அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு, வரும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான அரிசி, கோதுமையை ஒரே தவணையில் வழங்க மாநில அரசுகளை, மத்திய அரசு அறிவுறுத்திஉள்ளது. அதற்கு ஏற்ப, மூன்று மாத பொருட்களையும் ஒரே தவணையில் ஒதுக்கீடு செய்ய உள்ளது.
மத்திய அரசிடம் மூன்று மாதங்களுக்கான பொருட்களை வாங்க சம்மதம் தெரிவித்துள்ள தமிழக அரசு, ரேஷனில் வழங்க முன்வரவில்லை.
இதுதொடர்பாக நம் நாளிதழில் செய்தி வெளியான நிலையில், தற்போது, தமிழக ரேஷன் கடைகளில் அனைத்து அரிசி கார்டுதாரர்களுக்கும், மூன்று மாத அரிசியை ஒரே தவணையில் வழங்க, அரசு முடிவு செய்துள்ளது.
அரிசி பிரிவில் உள்ள, 1.10 கோடி முன்னுரிமையற்ற கார்டுதாரர்களுக்கான செலவை மட்டும், தமிழக அரசு ஏற்கிறது. மூன்று மாத பொருட்களையும் ஜூனில் வழங்கலாமா அல்லது ஜூலையில் வழங்கலாமா என்பது குறித்து, அரசு உயரதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.

