கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தங்கம் மதிப்பில் 75 சதவீதம் வழங்க முடிவு
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தங்கம் மதிப்பில் 75 சதவீதம் வழங்க முடிவு
ADDED : பிப் 04, 2025 11:36 PM
சென்னை:கூட்டுறவு வங்கிகளில், நகைக்கடன் பிரிவில் தங்கம் மதிப்பில், 75 சதவீதம் கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், பல்வேறு கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், தங்க நகை அடமானத்தின் பேரில், நகைக்கடன் வழங்கப்படுகிறது.
தங்கம் மதிப்பில், 75 சதவீதம் வரை கடன் வழங்க, ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. பல சங்கங்கள் நஷ்டத்தில் செயல்படுவதால், அதைவிட குறைந்த அளவு கடன் வழங்குகின்றன. தற்போது, கிராம் தங்கத்துக்கு, 5,000 ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது, ஆபரண தங்கம் சவரன் விலை, 62,000 ரூபாயை தாண்டியுள்ளது. தேசிய, தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள், தங்கம் மதிப்பில் அதிக தொகை கடன் வழங்குகின்றன. அதேபோல கூட்டுறவு சங்கங்களும், கூடுதல் தொகையை கடனாக வழங்க முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து, கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கூட்டுறவு நிறுவனங்களில் அசல் மற்றும் வட்டியை செலுத்த, தாமதம் செய்தாலும், நகைகளை உடனே ஏலம் விடுவதில்லை. வட்டியும் குறைவாக இருப்பதால், பலரும் கூட்டுறவு நிறுவனங்களில் நகைக்கடன் வாங்குகின்றனர். மற்ற வங்கிகளும், நிதி நிறுவனங்களும், தங்கம் மதிப்பில் அதிக தொகை கடன் வழங்குகின்றன.
எனவே, அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க, கூட்டுறவு வங்கிகளிலும், தங்கம் மதிப்பில், 75 சதவீதம் கடன் வழங்கப்பட உள்ளது. நகைக்கடன் பிரிவில், ஒருவருக்கு அதிகபட்சம், 30 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.