25,000 டன் கொள்ளளவில் நெல் சேமிக்கும் தளங்கள் 5 மாவட்டங்களில் அமைக்க முடிவு
25,000 டன் கொள்ளளவில் நெல் சேமிக்கும் தளங்கள் 5 மாவட்டங்களில் அமைக்க முடிவு
ADDED : ஆக 17, 2025 01:08 AM
சென்னை:மழையில் இருந்து நெல் மூட்டைகளை பாதுகாக்க, கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில், 25,000 டன் கொள்ளளவில் நெல் சேமிக்கும் தளங்களை தமிழக அரசு அமைக்கவுள்ளது.
தமிழக விவசாயிகளிடம் இருந்து, நெல் கொள்முதல் செய்யும் பணியை, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் மேற்கொள்கிறது. இந்த நெல், அரிசியாக மாற்றப்பட்டு ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது.
நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை வைக்க போதிய இடவசதி இல்லை. இதனால், திறந்தவெளியில் வைக்கப்படுவதால், மழையின்போது நெல் மூட்டைகள் நனைந்து பாழாகின்றன. இதை தவிர்க்கும் வகையில் நெல் சேமிப்பு தளங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கத்தில், 2,000 டன்; கடலுார் மேலாப்பாலையூரில், 2,000; விழுப்புரம் கண்டாச்சிபுரத்தில், 3,000; கிருஷ்ணகிரி ஜிஞ்சுப்பள்ளி, திண்டுக்கல் பழனியில் தலா, 9,000 டன் என, மொத்தம், 25,000 டன் கொள்ளளவு சேமிப்பு திறனில், நெல் சேமிப்பு தளங்களை கட்டுவதற்கான பணிகளில், அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஈடுபட்டுள்ளது.
மாநிலம் முழுதும், 3.63 லட்சம் டன் கொள்ளளவு சேமிப்பு திறனில், 23 நெல் சேமிப்பு தளங்கள் பயன்பாட்டில் உள்ளன.