துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் அமைக்க முடிவு
துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் அமைக்க முடிவு
ADDED : அக் 16, 2025 02:56 AM

மதுரை: இந்தியாவில் 'கார்பன் நியூட்ரல்' நிலையை கையாள்வது துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகம் தான்'' என மதுரையில் நடந்த கடல்சார் விழிப்புணர்வு முகாமில் துறைமுகத் தலைவர் சுஸாந்த்குமார் புரோகித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
துாத்துக்குடி விமான நிலையம் அருகில் 'மெகா ஷிப் பில்டிங் கிளஸ்டர்' அமைப்பதற்காக தமிழக அரசுடன் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். கொச்சி துறைமுகம் போல இங்கும் கப்பல்கள் கட்டுமானம் செய்யப்படும்.
இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அதன் பின் டெண்டர் விடப்படும். பணிகள் முடிவதற்கு நான்காண்டுகள் ஆகலாம்.
கார்பன் நியூட்ரல் காற்றில் மாசு வெளியீடு மிகக்குறைந்த அளவுக்கான, கார்பன் நியூட்ரல் நிலையை இத்துறைமுகம் எட்டியுள்ளது.
சோலார் பேனல்கள் மூலம் 6 மெகாவாட், காற்றாலைகள் மூலம் 2 மெகாவாட் மின் உற்பத்தி செய்கிறோம். துறைமுகத்தின் மின்தேவையே 8 மெகாவாட் தான்.
காற்றாலை வாயிலாக, கூடுதலாக 6 மெகாவாட் மின்உற்பத்தி தயாரிக்கும் பணி நடக்கிறது.
இதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை சரக்குகளை கையாளும் வாகனங்களுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இதன் மூலம் கரியமில வாயு வெளியீடு மேலும் குறைய வாய்ப்புள்ளது. 2026 மார்ச்சுக்குள் இலக்கை அடைவோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்தி 'கார்பன் நியூட்ரல்' நிலையை கையாளும் முதல் துறைமுகம் என்ற பெருமையை வ.உ.சி., துறைமுகம் பெற்றுள்ளது.
எரிபொருள் சேமிப்பு இந்தியாவிலேயே இங்கு தான் பசுமை ஹைட்ரஜன் தயாரிப்பு நிலையம் உருவாக்கப்பட்டது. திடக்கழிவுகளை மெத்தனாலாக மாற்றும் திட்டம் ஆரம்ப நிலையில் உள்ளது.
பசுமை மெத்தனால் எனப்படும் எரிபொருள் சேமிப்பு மற்றும் நிரப்பும் வசதியும் உருவாக்கும் பணி நடக்கிறது. இத்திட்டம் நிறைவடைந்தால் இந்தியாவின் முதல் பசுமை எரிபொருள் கொண்ட துறைமுகமாக இது பெருமை பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.