ADDED : அக் 21, 2024 04:17 AM

சென்னை : 'திருப்பத்துார், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, மயிலாடுதுறை மாவட்டங்களில், 90 கோடி ரூபாய் மதிப்பில், அனைத்து வசதிகளுடன் கூடிய, திறந்தவெளி மற்றும் உள்விளையாட்டு அரங்கங்களை உள்ளடக்கிய, மாவட்ட விளையாட்டு வளாகங்கள் படிப்படியாக அமைக்கப்படும்' என, கடந்த ஆண்டு சட்ட சபையில் மானிய கோாரிக்கையின் போது, துணை முதல்வர் உதயநிதி அறிவித்தார்.
அதன்படி, தற்போது திருப்பத்துார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்க, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், டெண்டர் கோரப்பட்டுள்ளது.
டெண்டர் எடுப்பவர்கள், 450 நாட்களுக்குள் பணியை முடிக்க வேண்டும் என்று, அறிவுறுத்தப்பட்டுள்ளது. கால்பந்து மைதானம், ஓடுதளம், இறகுபந்து, கைப்பந்து, என, பல வசதிகளுடன் மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கப்படஉள்ளது.

