குற்றவாளி மொபைலில் ஆபாச வீடியோ: முழுமையாக ஆய்வு செய்ய முடிவு
குற்றவாளி மொபைலில் ஆபாச வீடியோ: முழுமையாக ஆய்வு செய்ய முடிவு
ADDED : டிச 28, 2024 03:24 AM

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை வழக்கில் கைதான, ஞானசேகரனின் மொபைல் போனில், 50க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், மாணவி வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன், 37, கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு மூன்று மனைவியர் என்பதும், அதில் ஒருவர் அண்ணா பல்கலை கேன்டீனில் பணியாற்றியதும் தெரிய வந்துள்ளது.
அவரை பார்க்க அடிக்கடி பல்கலைக்கு சென்றுள்ளார். அப்போது, மாணவியரை நோட்டமிட்டு அவர்களை வீடியோ எடுத்துள்ளார். அவரது மொபைல் போனில், ஏராளமான ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்துள்ளன.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
ஞானசேகரின் மொபைல் போனில், இணையதளத்தில் இருக்கும் ஆபாச வீடியோ மற்றும் அவரது தனிப்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தன.
பல்கலை வளாகத்தில், மாணவியரை தவறான கண்ணோட்டத்தில் எடுத்த வீடியோ என, 50க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருந்தன. அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.
அவரது மொபைல் போனில் இருந்து, வேறு யாருக்காவது ஆபாச வீடியோ பகிரப்பட்டுள்ளதா, எந்த மாதிரியான வீடியோக்கள் பகிரப்பட்டுள்ளன என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.
கடந்த ஆறு மாதங்களில், அவரது மொபைல் போனில் இருந்து மற்றவர்களுக்கும், மற்றவர்களிடமிருந்து அவருக்கும் பகிரப்பட்ட வீடியோ, போட்டோ மற்றும் அவரது 'வாட்ஸாப்' குறுஞ்செய்தி உள்ளிட்டவையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அவரது, 'வாட்ஸாப் வாய்ஸ் கால்' மற்றும், 'வீடியோ கால்' யாருக்கெல்லாம் அதிகம் சென்றது என்றும் விசாரிக்கப்படுகிறது.
ஞானசேகரனை ஐந்து நாட்கள், காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு, முழு விபரம் தெரிய வரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.