விதைப்பு முதல் அறுவடை வரை இயந்திரம் பயன்படுத்த முடிவு
விதைப்பு முதல் அறுவடை வரை இயந்திரம் பயன்படுத்த முடிவு
ADDED : ஆக 21, 2025 12:56 AM
சென்னை:விதைப்பு முதல் அறுவடை வரை, இயந்திரத்தை பயன்படுத்தும் திட்டத்திற்கு, ஒரு கிராமத்திற்கு ஒரு விவசாயியை தேர்வு செய்யும் பணி துவங்கிஉள்ளது.
மாநிலம் முழுதும் வேளாண் தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால், சாகுபடி நேரத்தில், நடவு, களையெடுப்பு, அறுவடை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியாமல், விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வெளிநாடுகளை பின்பற்றி விதைப்பு முதல் அறுவடை வரை இயந்திரங்களை பயன்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த, தமிழக வேளாண் துறை முடிவெடுத்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பு, நடப்பாண்டு பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது. அதன்படி, ஒரு கிராமத்தில், ஒரு விவசாயியை தேர்வு செய்து, இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் விவசாயிக்கு, ஏக்கருக்கு 27,000 ரூபாய் மானியமாக வழங்கப்பட உள்ளது.
வேளாண் பொறியியல் துறை வாயிலாக, இதற்கான பயனாளிகள் தேர்வு துவங்கி உள்ளது. நடவு, களையெடுப்பு, அறுவடை ஆகிய பணிகளுக்கு தேவையான இயந்திரங்களையும், தொழில்நுட்ப ஆலோசனைகளையும், வேளாண் பொறியியல் துறையின் வல்லுநர்கள் வழங்க உள்ளனர்.

