காற்றின் வேகம் குறைந்ததால் காற்றாலை மின் உற்பத்தி சரிவு
காற்றின் வேகம் குறைந்ததால் காற்றாலை மின் உற்பத்தி சரிவு
UPDATED : பிப் 03, 2024 07:37 AM
ADDED : பிப் 03, 2024 01:26 AM

தமிழகத்தில் நேற்று காற்றாலை மின் உற்பத்தி கடுமையாக சரிந்தது. தமிழக மின் உற்பத்தி அமைப்புகள் மூலம் மொத்தம், 18,489 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இதில், கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருப்பூர், தென்காசி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள காற்றாலைகள் மூலம் தினசரி அதிகபட்சமாக, 8,894 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.
ஆண்டுதோறும் தென்மேற்கு பருவகாற்று துவங்கும் ஜூன் மாதம் முதல், செப்டம்பர் வரை காற்றாலைகளில், 3,500 முதல், 5,000 மெகாவாட் வரை காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். தற்போது காற்றின் வேகம் குறைந்து விட்டதால் காற்றாலைகளில் மின் உற்பத்தியும் வெகுவாக குறைந்து விட்டது. நேற்று முன்தினம், 27 மெகாவாட் ஆக காற்றாலை மின் உற்பத்தி சரிந்தது.
நேற்று காற்றாலை மின் உற்பத்தி, 49 மெகாவாட் ஆக சற்று அதிகரித்தது. காற்றாலை மற்றும் நீர்மின் நிலையங்களில் மின் உற்பத்தி வெகுவாக குறைந்ததால் அனல், அணு, சோலார் மூலம் மின் உற்பத்தி செய்து விநியோகம் செய்யும் நிலை மின் கழகத்துக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தமிழக மின்நுகர்வு, 16,924 மெகாவாட் ஆக இருந்த நிலையில் நேற்று நுகர்வு, 16,888 மெகாவாட் ஆக சற்று சரிந்தது.
நமது நிருபர்

