sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 25, 2025 ,புரட்டாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

புதிய பாரதத்தின் தத்துவ ஞானி தீன்தயாள் உபாத்யாயா

/

புதிய பாரதத்தின் தத்துவ ஞானி தீன்தயாள் உபாத்யாயா

புதிய பாரதத்தின் தத்துவ ஞானி தீன்தயாள் உபாத்யாயா

புதிய பாரதத்தின் தத்துவ ஞானி தீன்தயாள் உபாத்யாயா


ADDED : செப் 25, 2025 01:41 AM

Google News

ADDED : செப் 25, 2025 01:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நுாற்றாண்டுகளுக்கும் மேலான அந்நிய ஆதிக்கத்தின் விளைவாக, அரசியல் மற்றும் பொருளாதார தத்துவங்களில் புரையோடி போயிருந்த மேற்கத்திய சிந்தனைகளின் தாக்கத்தை விலக்கி, நல்லிணக்கத்தை நோக்கமாக கொண்ட, பண்டைய இந்திய அரசியல் வாழ்க்கையை மீட்டெடுக்க முயன்ற மாபெரும் தளகர்த்தர்களில் முக்கியமானவர் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா.

காங்கிரஸ் அல்லாத ஓர் இயக்கத்தைக் கட்டமைக்க அடித்தளமிட்டவர் இவர். இவரது பிறந்த தினம் இன்று (25, செப்டம்பர்). தனது புதிய அவதாரத்தின் மூலம் இன்று இந்தியாவின் வளர்ச்சி முகத்தை மாற்றியமைத்த பாரதிய ஜனதா கட்சியின் முந்தைய வடிவமான ஜனசங்கத்தின் தலைவர்களில் முதன்மையானவர் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா.

தேசியச் செயலராக, தலைவராக தொடக்க காலம் முதல் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியின் சித்தாந்தங்களை வளர்த்தெடுத்தவர்.

இளமைக் காலம் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா, உத்தர பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் உள்ள நாக்லா சந்தரபான் என்ற கிராமத்தில் மிகச் சாதாரண குடும்பத்தில் 1916 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் நாள் பிறந்தார். மூன்று வயதிற்குள் தந்தையையும், ஏழு வயதிற்குள் தாயாரையும் இழந்த தீன்தயாள், ரயில்வே துறையில் பணிபுரிந்த தன் தாய்மாமன் ராதாராமனின் அரவணைப்பில் வளர்ந்தார்.

வறுமையான குடும்ப சூழலில் வீட்டு வேலைகளையும் கவனித்துக் கொண்டு படித்தார். பத்தாம் வகுப்பு மற்றும் பள்ளி மேல்நிலைக்கல்வித் தேர்வில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்றதற்காக கல்வி உதவித்தொகையும் பெற்றார்.

இளங்கலை பட்டப்படிப்பிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். ஆனால், குடும்பச்சூழல் காரணமாக முதுகலைப் பட்டப்படிப்பை இடையிலேயே விட்டுவிட்டார். இவர், அரசு நிர்வாகப்பணித் தேர்விலும், இளநிலை ஆசிரியர் பயிற்சியிலும் தேர்ச்சி பெற்றிருந்தாலும் கூட, பல்வந்த் சாப்தே மூலம் 1937ல் ஆர்.எஸ்.எஸ்.,சில் சேர்ந்தார்.

சமூக வாழ்க்கை ஆர்.எஸ்.எஸ்.,சைத் தோற்றுவித்த டாக்டர் ஹெட்கேவர் மற்றும் நானாஜியால் பெரிதும் கவரப்பட்டு, 1942 முதல் முழு நேர ஊழியராக மாறினார்.

கடந்த, 1951ல் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியால் துவக்கப்பட்ட 'ஜனசங்கம்' என்ற அரசியல் இயக்கத்தில் சேர்ந்தார். 1952ல் ஜனசங்கத்தின் தேசியச் செயலராக நியமிக்கப்பட்டார்.

ஹிந்தி, ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் திறம்பட எழுதக்கூடியவர் இவர், 1945ல், 'ராஷ்டிரதரம்' என்ற மாத இதழ், 1948ல் 'பஞ்சஜன்யா' என்ற வார இதழ், 1949- - 50ல் 'சுதேசி' நாளி தழையும் வெளியிட்டார்.

மேலும், 'சாம்ராட் சந்திர குப்தர், ஜெகத்குரு சங்கராச்சாரியா' உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதினார். ஆர்கனைசர் என்ற ஆங்கில வார இதழில் 'அரசியல் டைரி' என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதி வந்தார்.

இந்திய அரசியலமைப்பின் 370வது சட்டப்பிரிவிற்கு எதிராக டாக்டர் முகர்ஜி, ஒரு சத்யாகிரகக் குழுவுடன் ஜம்மு- காஷ்மீரை நோக்கிப் பயணப்பட்டார். அப்போது கைது செய்யப்பட்டு ஸ்ரீநகர் சிறையில் அடைக்கப்பட்ட அவர், அங்கேயே மர்மமான முறையில் திடீரென இறந்தார். கட்சியின் முழுப் பொறுப்பும், 37 வயதே நிரம்பி இருந்த தீன் தயாள் கைக்கு வந்தது.

தொடர்ந்து 15 ஆண்டுகள் வாழ்க்கையின் இறுதி நாள் வரை அதுவே அவரது இலட்சியப் பயணமாக அமைந்தது.

கட்சியை அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்றி அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இட்டுச் சென்றதிலும், அதன் அரசியல் சித்தாந்தங்களைச் செதுக்கியதிலும், பலமான கொள்கைகளையும் செயல்முறைகளையும் வகுத்ததிலும் அவரது பங்களிப்பு மகத்தானது.

பின், 1980ல் ஜனசங்கம், பெயர் மாற்றத்துடன் பாரதிய ஜனதா கட்சியாகி, இன்று இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளதற்கு, அன்றே அடித்தளமிட்ட தேசத்தலைவர் தீன் தயாள் உபாத்யாயா ஆவார்.

பாரதிய ஜனசங்கத்தின் தொடக்க காலம் முதல் தொடர்ந்து பொதுச் செயலராகப் பணியாற்றிய தீன்தயாள் உபாத்யாயா, 1967, டிசம்பரில், தேசியத் தலைவர் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

ஆனால், 1968, பிப்., 11ல், ரயில் பயணத்தின்போது கொல்லப்பட்டார். வாரணாசி அருகே உள்ள முகல்சராய் ரயில் நிலையத்தின் நடை பாதையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

பல தலைவர்களாலும், சிறந்த இந்தியர், சிறந்த ஸ்வயம்சேவக், எதிரிகளற்றவர், தெய்வீக குணங்களைக் கொண்ட மனிதர் என போற்றப்பட்டவர். மகாத்மா காந்தி, பாலகங்காதர திலகர், சுபாஷ் சந்திர போஸ் ஆகிய தேசியவாதிகளின் வரிசையில் வைக்கப்பட்டவர்.

மனிதநேய சித்தாந்தம் பிரதமர் மோடி, தீன் தயாள் உபாத்யாயா சொல்லிக் கொடுத்த மனித நேயத்தைக் கடைப்பிடித்து வருகிறார். தற்போது செயல்பட்டு வரும் தேசிய புதிய கல்விக் கொள்கை, புதிய சுகாதாரக் கொள்கை, பொது சிவில் சட்டம், புதிய வேளாண் சட்டங்கள், குடியுரிமைத் திருத்த மசோதா, ஆத்மநிர்பர் பாரத், மேக் இன் இந்தியா, ஸ்டார்ட்அப் இந்தியா, துாய்மை இந்தியா போன்ற அனைத்துக் கொள்கைகளுக்கும், சட்டங்களுக்கும், திட்டங்களுக்கும் ஆதாரமாக இருப்பது, இக்கோட்பாடே!

சுதந்திரத்துக்குப் பிறகும் கூட, நம் அரசியல் கட்சிகளின் சிந்தனை மேற்கத்திய சிந்தனையாகவே தொடர்ந்தது. இந்தியர்களின் மனமும் சிந்தனை ஓட்டமும் பாரதிய தன்மை கொண்டதாக இருக்கவில்லை. இந்திய அரசியலில் காணப்பட்ட மேற்கத்திய தன்மையும் ஊழல்களும் இவரை மிகவும் கவலை அடையச் செய்தன.

இடதுசாரி மற்றும் வலதுசாரி அரசியல் கோட்பாடுகள் செயற்கையானவை என்று கருதினார். இவை பாரத தேசத்திற்கு ஒவ்வாதவை என்று எடுத்துரைத்தார். அரசியலிலிருந்து தர்மத்தை பிரித்துப் பார்க்கக் கூடாது என்பதை கொள்கை ஆக்கினார்.

கடந்த, 1965ல் மும்பையில் நடைபெற்ற பாரதிய ஜனசங்கக் கட்சி கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் ஒரு தீர்க்கமான கொள்கையை முன்வைத்தார். இந்த விளக்கங்கள் ஒருங்கிணைந்த மனிதநேயக் கோட்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அறம் இல்லாத பொருளாதாரமும் ஒழுக்கமில்லாத அரசியலும் ஒரு சமுதாயத்தை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் என்றார் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா.

பொருளாதாரக் கொள்கைகளும் அரசியல் கோட்பாடுகளும் மக்களின் பாரம்பரியம், கலாசாரம், இயற்கை வளங்கள் மற்றும் அவர்களின் எண்ண ஓட்டங்களை ஒட்டி அமைய வேண்டும் என்றார்.

இவர் மனிதனுக்குத் தேவையான தர்மம், காமம், அர்த்தம், மோட்சம் என்ற நான்கு புருஷார்த்தங்களை இன்றைய சமூக- பொருளாதார பிரச்னைகளுடன் தொடர்பு படுத்தி விவரித்தார்.

உடல், மனம், அறிவு மற்றும் ஆன்மா ஆகியவற்றால் ஆக்கப்பட்ட மனிதனுடைய இந்த நான்கு கூறுகளுக்கான தேவைகள் ஒரே சமயத்திலும் ஒருங்கிணைப்புடனும் பூர்த்தி செய்யப்பட வேண்டும்; இதை இயற்கைக்குப் பங்கமில்லாமல் பாரதப் பண்பாட்டுடன் செய்ய முயல வேண்டும் என வலியுறுத்தினார்.

சுதேசி பொருளாதரத்தை ஆதரித்தார். வெளிநாட்டுப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களைச் சார்ந்து உள்நாட்டுத் தொழில்கள் மற்றும் வளங்களை ஊக்குவித்தார்.

இன்றைய காலங்களின் தேவை புதிய நகரங்கள் அல்ல; கிராமங்களின் தொழில்மயமாக்கலே என்றார்.

விவசாயிகள் அரசாங்கங்களின் கட்டுப்பாடுகளில் இருந்தும், பிற நேர்மையற்ற கூறுகளிலிருந்தும் விடுபட வேண்டும்; விவசாயிகள் முதலாளிகளாகக் கருதப்பட வேண்டும்; பாரம்பரிய திறமைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்; உள்ளுர் சந்தைகள் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் தீன்தயாள் விரும்பினார்.

இருப்பினும், சுற்றுச் சூழலை அழிக்கும் நுகர்வுக் கலாசாரத்தை விட்டொழிக்க வேண்டும்; இயற்கை வளங்களின் சமநிலை பாதிக்காதவாறு, அவ்வளங்கள் தொடர்ந்து நமக்குக் கிடைக்கும் வண்ணம் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும், ஓவ்வொரு தொழிலாளியும் உணவைப்பெற வேண்டும் என்ற வழக்கமான முழக்கத்திற்குப் பதிலாக நம் பொருளாதாரத்தின் அடிப்படையாக அனைவருக்கும் உணவும் வேலையும் கிடைக்க வேண்டும் என்றார்.

தேசிய விழிப்புணர்வு, தேசிய அடையாளம் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்துகிற தீன்தயாள் உபாத்யாயா, பிளவு படுத்தும் மனப்பான்மை கொண்ட 'மேற்கத்திய தேசியவாதத்தை' எதிர்த்தார்.

தேசிய உணர்வின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டிய இவர், 'தேசிய அடையாளமும் கலாசார சுதந்திரமும் இருக்கும்போதுதான் அரசியல் சுதந்திரம் அர்த்தமுள்ளதாகிறது.

'எனவே, நம் தேசிய அடையாளம் குறித்த சிந்தனை அனைவருக்கும் தேவை; மேலும், நம் தேசிய அடையாளத்தை நாம் அறியாத வரை, நம்முடைய முழு ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள முடியாது' என்றார்.

பண்டிட் தீன்தயாளால் முன்மொழியப்பட்ட அரசியல் தத்துவமான இந்த ஒருங்கிணைந்த மனிதநேயம் இன்றைக்கும், என்றைக்கும் பொருந்துகிற தத்துவமாக இருக்கிறது!

தொடர்புக்கு:

பேராசிரியர் பூ.தர்மலிங்கம் இருக்கை பேராசிரியர்

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா இருக்கை

அழகப்பா பல்கலைக்கழகம் , காரைக்குடி

+91 94438 50902








      Dinamalar
      Follow us