மருத்துவ துறை மீது அவதுாறு; இ.பி.எஸ்., மீது எரிச்சல்
மருத்துவ துறை மீது அவதுாறு; இ.பி.எஸ்., மீது எரிச்சல்
ADDED : நவ 21, 2024 02:15 AM

சென்னை: 'தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியா, எரிச்சல் சாமியா என்கிற அளவிற்கு, மருத்துவ துறை மீது அவதுாறுகளை பரப்பி வருகிறார்' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பழனிசாமி குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஆட்சியில், மக்கள் சந்தித்த இன்னல்களை பட்டியலிட, மனம் வலிக்கிறது. இன்னல்களுக்கு மருந்தாக, மக்கள் அளித்த தீர்ப்பே ஆட்சி மாற்றம்.
ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, சாதனை படைக்கப்படுகிறது. இது மக்களுக்கு புரிகிறது. சிலருக்கு புரிய வேண்டும் என்பதற்காக, சாதனைகளை நினைவுகூர்கிறேன்.
அதன்படி, மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், இதயம் காப்போம், பாதம் காப்போம் என, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றுக்காக, மத்திய அரசின் விருதுகளை வாங்கி குவித்து வருவதுடன், உலக அளவில் உயரிய விருதான, ஐ.நா., விருது பெறப்பட்டுள்ளது.
எங்கள் ஆட்சியில், இது போன்ற சாதனை பட்டியலை கூறினால், நீண்டு கொண்டே செல்லும். இவை, பழனிசாமிக்கு புரியுமா எனத் தெரியவில்லை.
மத்திய அரசு, 2017ல் இருந்து விருதுகளை வழங்கி வருகிறது. தமிழகம் 614 விருதுகளை பெற்றுள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டும், 545 விருதுகள் கிடைத்துள்ளன. இவை, 10 ஆண்டுகால மக்கள் விரோத ஆட்சிக்கும், மூன்றரை ஆண்டு கால மக்கள் நலன் விரும்பும் ஆட்சிக்கும் உள்ள வேறுபாடு.
தற்போது, தனியார் மருத்துவமனைக்கு செல்வதை தவிர்த்து, அரசு மருத்துவமனைக்கு அதிகம் மக்கள் வர துவங்கி உள்ளனர். இதன் காரணமாக அரசு மருத்துவமனை பயன்பாடு அதிகரித்துள்ளது. அற்ப அரசியலுக்காக, ஏழை மக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவ சேவையை, குறை கூறி குளிர்காய நினைக்காதீர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

