சிதம்பரம் கனகசபை தரிசன ஏற்பாடுகளில் குறைபாடு ஐகோர்ட்டில் அறநிலையத்துறை அறிக்கை
சிதம்பரம் கனகசபை தரிசன ஏற்பாடுகளில் குறைபாடு ஐகோர்ட்டில் அறநிலையத்துறை அறிக்கை
ADDED : ஆக 22, 2025 11:50 PM
சென்னை:சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்துக்காக தீட்சிதர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளில், பல்வேறு குறைபாடுகள் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில், ஹிந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
கடலுார் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபை மண்டபத்தின் மீது ஏறி, பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி அளித்து, தமிழக அரசு, 2022 மே 15ல் அரசாணை பிறப்பித்தது.
அதிகாரிகள் குழு இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன் விசாரணையில் உள்ளது.
நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை தரப்பில், சிறப்பு பிளீடர் அருண்நடராஜன் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார். அதன் விபரம்:
சிதம்பரம் கோவில் கனகசபையின் மேற்கு பகுதியில் இருந்து, பக்தர்கள் தரிசனம் செய்து திரும்ப மேற்கொள்ளப்பட்டு உள்ள ஏற்பாடுகளை, அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.
கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன் வரை, கனகசபையின் கிழக்கு மற்றும் மேற்கு வாயில்கள் வழியே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதே நடைமுறையை பின்பற்றினால், பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
கோவிலுக்கு வார நாட்களில், 4,000; வார இறுதி நாட்களில், 5,000 முதல் 7,000; திருவிழா நாட்களில், 10,000 பக்தர்கள் வரையும் வருகை தருகின்றனர்.
கால பூஜை நடக்காத நேரங்களில், கனகசபை மீதேறி ஒவ்வொரு நாளும், 3 மணி நேரம் 15 நிமிடங்கள் வரை, மேற்கு புற வாயில் வழியாக பக்தர்கள், நடராஜரை வழிபட அனுமதிக்கப்படுகின்றனர்.
கனகசபையின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளின் பக்கவாட்டில் கூடுதலாக மர, இரும்பு படிகள் அமைத்து உள்ளே செல்லும் வழிகளாகவும், கனக சபையின் உள்ளே, எளிய வரிசை அமைப்புகள் ஏற்படுத்தியும், ஏற்கனவே உள்ள கிழக்கு, மேற்கு வாயில்களை வெளியேறும் வழிகளாகவும் பயன்படுத்தலாம்.
இதன் வாயிலாக, அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
யோசனை பொது தீட்சிதர்களின் தற்போதைய ஏற்பாட்டின்படி, நாளொன்றுக்கு, 1,400 பக்தர்கள் மட்டும் கனகசபை மீது தரிசனம் மேற்கொள்ள முடியும். அறநிலையத்துறை யோசனையை ஏற்றால், ஒரு நாளைக்கு, 4,500 பேர் வரை தரிசனம் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், பொது தீட்சிதர்கள் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்., 11க்கு தள்ளிவைத்தனர்.