துாத்துக்குடி தொழிற்பேட்டை மனைகள் ஒதுக்கீட்டில் தாமதம்
துாத்துக்குடி தொழிற்பேட்டை மனைகள் ஒதுக்கீட்டில் தாமதம்
ADDED : அக் 17, 2024 11:07 PM
சென்னை:துாத்துக்குடி மாவட்டம், லிங்கம்பட்டியில், 'சிட்கோ' நிறுவனம் அமைத்துள்ள தொழிற்பேட்டைக்கு அனுமதி அளிப்பதில், இரு ஊராட்சிகள் சொந்தம் கொண்டாடுவதால், சிறு தொழில் நிறுவனங்களுக்கு மனைகளை ஒதுக்கீடு செய்யும்பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசின், 'சிட்கோ' எனப்படும் சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம், மாவட்டங்களில் தொழிற்பேட்டைகளை உருவாக்கி வருகிறது.
அங்குள்ள தொழில் மனைகளை சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில் துவங்க ஒதுக்கீடு செய்கிறது. அதன்படி, கோவில்பட்டி தாலுகாவில் உள்ள லிங்கம்பட்டியில், 60 ஏக்கரில் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு, 165 நிறுவனங்களுக்கு தொழில் மனைகள் ஒதுக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தொழிற்பேட்டை அமைக்கும் பணி முடிவடைந்து விட்டது. இதற்கு, டி.டி.சி.பி., எனப்படும் நகர் ஊரமைப்பு துறையிடம் அனுமதி பெறப்பட்டது.
இதுகுறித்து, சிறு தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
துாத்துக்குடி மாவட்ட நிர்வாகம், லிங்கம்பட்டி ஊராட்சி என்று தெரிவித்த காரணத்தால் தான், லிங்கம்பட்டி தொழிற்பேட்டை என, பெயரிடப்பட்டது. அங்கு, 20 கோடி ரூபாய் செலவில் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள மனைகளை ஒதுக்கீடு செய்வதற்கு முன், தொழிற்பேட்டைக்கு உட்பட்ட ஊராட்சியிடம் அனுமதி பெற வேண்டும்.
அதன்படி, அனுமதி கோரியபோது, தங்களிடம் தான் அனுமதி பெற வேண்டும் என்று, லிங்கம்பட்டி மற்றும் அதற்கு அருகில் உள்ள ஊராட்சி என இரு ஊராட்சிகள் உரிமை கோருகின்றன.
இதனால், எந்த ஊராட்சியிடம் கட்டணம் செலுத்துவது என தெரியவில்லை. இந்த பணி முடிந்ததும், மனைகள் ஒதுக்கீடு துவங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.