கைமாறிய மனைகளுக்கு விலை நிர்ணயிப்பது தாமதம்; 25 ஆண்டுகளாக துாசு படிந்து கோப்புகள் காத்திருப்பு
கைமாறிய மனைகளுக்கு விலை நிர்ணயிப்பது தாமதம்; 25 ஆண்டுகளாக துாசு படிந்து கோப்புகள் காத்திருப்பு
ADDED : டிச 15, 2025 02:51 AM

சென்னை: தமிழகத்தில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டங்களில், ஒதுக்கீட்டாளர்களிடம் இருந்து கைமாறிய மனைகளுக்கு, விலை நிர்ணயிப்பதில், 25 ஆண்டுகளாக முடிவு எடுக்கப்படாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக, சென்னை பெருநகர நகர்ப்புற வளர்ச்சி திட்டம், தமிழக நகர்ப்புற வளர்ச்சி திட்டம் போன்றவை செயல்படுத்தப்பட்டன. இத்திட்டங்களில், குத்தகை மற்றும் விற்பனை என்ற அடிப்படையில் மனைகள் ஒதுக்கப்பட்டன. தமிழகம் முழுதும், 489 இடங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டத்தில், 93,000 மனைகள் மக்களுக்கு ஒதுக்கப்பட்டன. மனை ஒதுக்கீடு பெற்றவர்கள் முறையாக தவணை தொகையை செலுத்தி விற்பனை பத்திரம் பெற வேண்டும்.
ஆனால், இவர்களில் பலரும் தங்களது வறுமை சூழல் காரணமாக, மனைகளை வெளியாட்களுக்கு விற்பனை செய்துள்ளனர். முறையான விற்பனை பத்திரம் இல்லாமல், பெயரளவுக்கு ஒரு பத்திரம் எழுதி, அதை பதிவும் செய்யாமல் இந்த விற்பனை நடந்துள்ளது.
இவ்வாறு மனை வாங்கியோர், தங்கள் பெயரில் விற்பனை பத்திரம் கேட்டு வரும் போது பிரச்னை ஏற்படுகிறது. ஒதுக்கீட்டாளர் அல்லாத வெளியார் பெயருக்கு, விற்பனை பத்திரம் கொடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டது.
கடந்த 1999 முதல் மனை வாங்கியவர்கள், விற்பனை பத்திரம் வழங்க தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆரம்பத்தில், இது போன்று ஒதுக்கீட்டாளர் அல்லாத நபர், அந்த மனையில் வசிப்பது உறுதி செய்யப்பட்டால், அவரிடம், 5,000 ரூபாய் அபராதம் வசூலித்து வரன்முறை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுகுறித்து, 2002 ஆக., 8ல் நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, வாரிசுதாரர் என்றால் அவருக்கு குறைந்த விலையிலும், வெளியாட்கள் என்றால், அவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி, சந்தை நிலவரப்படி விலை நிர்ணயித்து பணம் வசூலிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால், சந்தை நிலவர மதிப்பு அடிப்படையில், விலை நிர்ணயிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. இப்படி அறிவித்தால், யாரும் வரன்முறைக்கு வர மாட்டார்கள் என, அரசுக்கு வாரியம் பதில் அளித்தது.
அதன்பின், 25 ஆண்டுகளாக இந்த விஷயத்தில் வாரிய அதிகாரிகளும், அரசும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதுதொடர்பான கோப்புகள் அரசிடம் நிலுவையில் உள்ளன.
இதுகுறித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்த விஷயத்தில், ஒதுக்கீட்டாளர் அல்லாத வெளியாட்கள் குறித்து, 2023ல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 55,000 பேர் முறையான பத்திரம், ஒதுக்கீட்டு ஆணை இல்லாமல், மனைகளில் வசித்து வருவது தெரியவந்துள்ளது.
இதில், ஒவ்வொருவரிடமும், 200 சதுரடி அளவுக்கு தான் நிலம் உள்ளது. இதற்கு சந்தை நிலவர மதிப்பு நிர்ணயிப்பது சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்பட்டதால், மாற்று வழிகள் ஆராயப்பட்டன. நில வழிகாட்டி மதிப்பு அடிப்படையில், வரன்முறை தொகையை நிர்ணயிக்க, புதிய பரிந்துரை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், தலைமை செயலர் தலைமையில், உயரதிகாரிகள் கூட்டம் நடத்தி, விரைவில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

