பெண்ணையாறு கட்டமைப்பு பணி தாமதம் அக்டோபரில் மீண்டும் வெள்ள அபாயம்
பெண்ணையாறு கட்டமைப்பு பணி தாமதம் அக்டோபரில் மீண்டும் வெள்ள அபாயம்
ADDED : மே 16, 2025 10:47 PM
சென்னை:தென்பெண்ணையாறு கட்டமைப்புகளை சீரமைக்க, சிறப்பு நிதியை எதிர்பார்த்து நீர்வளத்துறை காத்திருக்கிறது.
தமிழகத்தில், 2024 டிசம்பரில், 'பெஞ்சல்' புயலுடன் கனமழை கொட்டியதால், தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அதில், திருவண்ணாமலை மாவட்டம் அகரம்பள்ளிப்பட்டு - தொண்டைமானுார் இடையே, 15.9 கோடி ரூபாயில் கட்டப்பட்ட புதிய பாலம் அடித்து செல்லப்பட்டது.
விழுப்புரம் திருக்கோவிலுார் அணைக்கட்டும், தளவானுார் அணைக்கட்டும் முற்றிலும் சேதம் அடைந்தன. அதுமட்டுமின்றி, கடலுார் மாவட்டம் வரை, பல்வேறு இடங்களில் நீரை பகிர்ந்து அளிக்க பயன்படுத்தப்பட்ட, 'ரெகுலேட்டர், ஷட்டர்'கள் உள்ளிட்டவையும் சேதமாகின.
இவற்றை நிரந்தரமாக புனரமைக்க, 700 கோடி ரூபாய்க்கு மேல் நீர்வளத்துறைக்கு தேவை. இதுகுறித்த அறிக்கை அரசிடம் சமர்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால், நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை.
வரும் அக்டோபரில் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன், சீரமைப்பு பணிகளை முடித்தாக வேண்டும். இல்லையெனில், வயல்களிலும், சாலைகள், குடியிருப்பு பகுதிகளிலும், வெள்ளநீர் புகும் வாய்ப்புள்ளது.
இதுகுறித்து, சென்னை மண்டல நீர்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
'தளவானுார் அணைக்கட்டு, 80 கோடி ரூபாயில் புனரமைக்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலினும், 'திருக்கோவிலுார் அணை, 130 கோடி ரூபாயில் சீரமைக்கப்படும்' என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் அறிவித்து உள்ளனர்.
இந்த பணிகளுக்கும், கட்டமைப்புகளை சீரமைக்கும் மற்ற பணிகளுக்கும் நிதி பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.