ADDED : ஏப் 26, 2026 07:01 AM
சேலம், சேலம் மாவட்டத்தில் உள்ள, 11 சட்டசபை தொகுதிகளுக்கும், 3,469 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. மாலை, 6:00 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்தும், அதற்கு சற்று முன் வந்த வாக்காளர்களுக்கு, 'டோக்கன்' வழங்கி ஓட்டுப்பதிவு அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டது. அன்று இரவு, 11:45 மணிக்கு, 90.74 சதவீதம் ஓட்டு பதிவாகி இருப்பதாகஅறிவிப்பு செய்யப்பட்டது.
மறுநாள் காலை அதிகபட்சம், 7:00 மணிக்குள் ஓட்டுப்பெட்டிகள் அனைத்தும், சம்பந்தப்பட்ட ஓட்டு எண்ணும் மையத்தில் ஒப்படைக்கப்பட்டு அதன் இருப்பு அறைகளுக்கு, 'சீல்' வைத்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஓட்டுச்சாவடி அலுவலர்களும் வீடு திரும்பினர். அதன்பிறகும் துல்லிய ஓட்டுப்பதிவு விபரம் வெளியிடப்படவில்லை. தொடர்ந்து இரவு, 7:30 மணிக்கு வெளியிடப்பட்ட ஓட்டுப்பதிவு சதவீதம், 90.76 என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. எனினும் அதை உறுதிப்
படுத்தவில்லை. கெங்கவல்லி, ஏற்காடு தேர்தல் அலுவலர்கள், உரிய நேரத்தில் ஓட்டுப்பதிவு விபரங்களை சரிவர தெரிவிக்கவில்லை என தேர்தல் பிரிவினர் கூறினர். இதுவே ஓட்டுப்பதிவு விபரம் வெளியிடுவதில் தாமதத்துக்கு காரணம் என கூறப்பட்டது. பின் கலெக்டரின் உத்தரவுக்கு பிறகே, இரவு, 8:29 மணிக்கு, துல்லிய விபரம் வெளியிட்டதில், 90.75 சதவீதம் பதிவாகி இருப்பது உறுதி செய்யப்பட்டது.'விறுவிறு' ஓட்டுப்பதிவு
காலை, 7:00 முதல் மாலை, 6:00 மணி வரை, ஓட்டுப்பதிவு நேரமாக அறிவிக்கப்பட்டது. அவை, 2 மணி நேரத்துக்கு ஒருமுறை கணக்கீடு செய்து ஓட்டு சதவீதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி சேலம் மாவட்டத்தில் காலை, 9:00 மணி நிலவரப்படி, 19.61 சதவீத ஓட்டு பதிவானது. 11:00 மணி நிலவரப்படி, 20.99 சதவீதம்; மதியம், 1:00 மணிக்கு, 20.86 சதவீதம்; மதியம், 3:00 மணிக்கு, 14.34 சதவீதம்; மாலை, 5:00 மணி நிலவரப்படி, 12.2 சதவீதம் என, 88 சதவீத ஓட்டுகள் பதிவாகின. அதன்பின் ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றபோது, 2.75 சதவீத ஓட்டுகள் பதிவாகி, 90.75 சதவீதம் பதிவானது என உறுதி செய்யப்பட்டது.
மொபைலுக்கு தடை
தேர்தலில் பதிவான ஓட்டுகள் வரும் மே, 4ல் எண்ணப்படுவதை முன்னிட்டு, தொகுதி தேர்தல் அலுவலர்களுடன், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடந்தது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் அருண்தம்புராஜ் கூறியதாவது: மாவட்டத்தில், 11 தொகுதிகளில் பதிவான ஓட்டுகளை எண்ண, 4 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஓட்டுகளை எண்ணுவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேட்பாளரின் முகவர்கள், தொகுதி தேர்தல் அலுவலர் வழங்கிய அனுமதி அட்டையை கட்டாயம் கொண்டு வருதல் வேண்டும்.
ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், முகவர்கள், ஓட்டும் எண்ணும் மையத்துக்குள் மொபைல் போன் எடுத்து வர அனுமதி கிடையாது. மொபைல் போன்களுக்கு பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஓட்டும் எண்ணும் அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும், மையத்தில் தனி வழி உள்ளது. அதேபோல் பார்வையிடும் முகவர்கள் செல்ல தனி வழி உண்டு. அதை உறுதிப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, கருப்பூர் அரசு பொறியியல் கல்லுாரியில் நிறுவப்பட்டுள்ள ஓட்டும் எண்ணும் மையம், 'சிசிடிவி' கேமரா உள்பட, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு பணிகளை அருண்
தம்புராஜ் பார்வையிட்டார்.
