7 பேரை மீட்கும் பணியில் தொய்வு: அமைச்சர் விளக்கம்
7 பேரை மீட்கும் பணியில் தொய்வு: அமைச்சர் விளக்கம்
ADDED : டிச 02, 2024 10:37 AM

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது; இடிபாடுகளில் 7 பேர் சிக்கியுள்ளனர். எப்படியாவது அவர்களை காப்பாற்றியாக வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் நேற்று முதல் முயன்று வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்புபடையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு பள்ளியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு பாறை ஒன்று மிகப்பெரிதாக உள்ளது. இந்தப் பாறை உருண்டால், மேலும் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சேதம் ஏற்படும் போது, மலைகளை பிளந்து எடுக்கக் கூடிய பணி செய்பவர்களை, நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ஏற்காட்டில் இருந்து அழைத்துள்ளோம். மதியத்திற்குள் வந்துவிடுவார்கள். அதுவும் கீழே இருக்கும் மண் உறுதித்தன்மை பெற்ற உடனே தான் மலைகளை உடைக்க முடியும்.
மேற்கொண்டு அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, சென்னை ஐ.ஐ.டி.,யின் பேராசிரியர் மோகன் மற்றும் பூமிநாதன் ஆகியோரை அங்கிருந்து முதல்வர் ஸ்டாலின் அனுப்பியுள்ளார். அவர்கள் வந்த பிறகு தான், கற்களை எல்லாம் அகற்றிய பிறகு தான், உள்ளே இருப்பவர்களின் நிலைமை தெரியும். அவர்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்று தான் நாங்கள் நினைக்கிறோம்.
தொடர்ந்து மழை பெய்து கொண்டு தான் இருக்கிறது. இந்த சூழலிலும் மீட்பு பணி நடந்து வருகிறது.
போதுமான அளவுக்கு மீட்பு பணிகளில் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெரிய சாலையாக இருந்திருந்தால், ஹிட்டாச்சி அல்லது ஜே.சி.பி.,யை விட்டு, 2 மணி நேரத்தில் அகற்றியிருக்கலாம். தற்போது, ஒருவர் வெளியே சென்றால் தான், மற்றொருவர் வரும் நிலை உள்ளது.
கலெக்டர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் மீட்பு பணிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மழை காலங்களில் பிரச்னைக்குரிய பகுதிகளைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும், எனக் கூறினார்.