இணை ரயில்கள் வருகை தாமதம் பயணியர் பல மணி நேரம் தவிப்பு
இணை ரயில்கள் வருகை தாமதம் பயணியர் பல மணி நேரம் தவிப்பு
ADDED : மே 24, 2025 02:01 AM
சென்னை:இணை ரயில்கள் வருகை தாமதமானதால், ஷாலிமர், திப்ருகர் செல்ல வேண்டிய பயணியர், ரயில் நிலையத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
நீண்ட துாரம் செல்லும் விரைவு ரயில்களில், இணை ரயில்கள் வருவது தாமதமாகி வருகிறது.
குறிப்பாக, மேற்கு வங்கம், அசாம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களின் இணை ரயில்கள் தாமதமாக வருவது, அடிக்கடி நடக்கிறது. இதனால், பயணியர் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது.
சென்னை சென்ட்ரலில் இருந்து, மேற்கு வங்கம் ஷாலிமாருக்கு நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு செல்ல வேண்டிய விரைவு ரயில், 18 மணி நேரம் தாமதமாக, நேற்று அதிகாலை புறப்பட்டு சென்றது.
கன்னியாகுமரியில் இருந்து, அசாம் மாநிலம் திப்ருகருக்கு, நேற்று மாலை 5:25 மணிக்கு செல்ல வேண்டிய விரைவு ரயில், நான்கு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது.
குறிப்பிட்ட நேரத்தில், ரயில் புறப்படும் என்ற நம்பிக்கையில், ரயில் நிலையம் வரும் பயணியர், ரயில் புறப்பட பல மணி நேரம் தாமதமாவதால், அங்கேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. குடும்பத்துடன் வருவோர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே, குறித்த நேரத்தில் ரயில்கள் புறப்பட, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.