மருத்துவமனை கூரையில் செஞ்சிலுவை சின்னம் டில்லி அரசு உத்தரவு
மருத்துவமனை கூரையில் செஞ்சிலுவை சின்னம் டில்லி அரசு உத்தரவு
ADDED : மே 11, 2025 01:40 AM
புதுடில்லி:அண்டை நாடான பாகிஸ்தானுடன் போர் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், மருத்துவமனை கூரைகளில் செஞ்சிலுவைச் சங்க சின்னம் பொறிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 26 சுற்றுலா பயணியரை சுட்டுக் கொன்றனர்.
இதைத் தொடர்ந்து, நம் ராணுவம் கொடுத்த, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பதிலடியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் தரைமட்டம் ஆகின.
இதனால், ஆத்திரம் அடைந்த பாக்., ராணுவம் நம் எல்லையோரத்தில் தாக்குதலை துவங்கியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், நாடு முழுதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டில்லியில் போலீஸ், ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினர் 24 மணி நேரமும் ரோந்து சுற்றி வருகின்றனர். முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், டில்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் கூரையில் செஞ்சிலுவைச் சங்க சின்னம் பொறிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, டில்லி அரசின் சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அனைத்து மருத்துவமனைகளிலும் அவசரகால தயார்நிலை குறித்த மாதிரிப் பயிற்சி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருந்துகள், எரிபொருள், ஜெனரேட்டர் பராமரிப்பு, ஆக்ஸிஜன் சிலிண்டர், வென்டிலேட்டர் போன்ற அத்தியாவசிய தேவைகள் போதுமான அளவு இருப்பதை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல், டாக்டர்கள், அறுவை சிகிச்சை, எலும்பியல் மற்றும் தீக்காய பராமரிப்பு நிபுணர்களுக்கு விடுமுறையை ரத்து செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கை மற்றும் உபகரணங்களை புதுப்பிக்கவும், உணவகம் தடையின்றி செயல்படுவதை உறுதி செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவசரகால சூழ்நிலைகளைக் கையாள மருத்துவமனைகளில் தீயணைப்பு கருவிகள் மற்றும் இதர உள்கட்டமைப்புகளை பரிசோதித்து தயார் நிலையில் வைத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரிகள் இணைந்து அனைத்து மருத்துவமனைகளிலும் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.