அறிவும், வேதங்களும் ஒன்றாக செல்ல வேண்டும் டில்லி ஐகோர்ட் நீதிபதி ஹரீஷ் வைத்தியநாதன் பேச்சு
அறிவும், வேதங்களும் ஒன்றாக செல்ல வேண்டும் டில்லி ஐகோர்ட் நீதிபதி ஹரீஷ் வைத்தியநாதன் பேச்சு
ADDED : மார் 31, 2025 03:50 AM

பாலக்காடு: ''அறிவும் வேதங்களும் ஒன்றாகச் செல்ல வேண்டும்,'' என்று டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஹரீஷ் வைத்தியநாதன் கூறினார்.
கேரள மாநிலம், பாலக்காடு சந்திரநகர் அருகே உள்ள, சிருங்கேரி மடம் சாரதாம்பாள் கோவில் நிர்வாகம், பத்மஸ்ரீ விருது பெற்ற உச்சநீதிமன்ற மூத்த வக்கீல் வைத்தியநாதன் மற்றும் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற அவரது மகன் ஹரீஷ் வைத்தியநாத சங்கர் ஆகியோரை, வேத ஆசி வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், கவுரவிப்பை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஹரீஷ் வைத்தியநாத சங்கர் பேசுகையில், ''அறிவும், வேதங்களும் ஒன்றாகச்செல்ல வேண்டும். சமூகம், சமூக மாற்றத்திற்கான ஆதரவாளர்களாக மாற வேண்டும். மதிப்புகள் நிறைந்த வாழ்க்கை, நமது பயணத்தை அர்த்தம் உள்ளதாக்கும்,'' என்றார்.
முன்னதாக கோவிலுக்கு வந்த மூத்த வக்கீல் வைத்தியநாதன் மற்றும் நீதிபதி ஹரீஷ் வைத்தியநாத சங்கர் ஆகியோரை, கோவில் தலைவர் கரிம்புழை ராமன் வரவேற்றார்.
ரிக் வேதம், சுக்ல யஜுர் வேதம், கிருஷ்ண யஜுர் வேதம், சாம வேதம், அதர்வ வேதம் ஆகிய வேதபாராயணத்துடன் அவர்களுக்கு ஆசி வழங்கினர்.
பிரம்மஸ்ரீ விஸ்வமணி, பிரம்மஸ்ரீ சேஷாத்ரி சுஹாஸ் வாத்தியார், பிரம்மஸ்ரீ கோபாலன், பிரம்மஸ்ரீ ரமேஷ் திராவிட், பிரம்மஸ்ரீ ராம கோவிந்த பட்டாச்சாரியர், பிரம்மஸ்ரீ சேது வாத்தியார் ஆகியோர் தலைமையில் இந்த சதுர்வேத பாராயணம் நடந்தது.
நிகழ்ச்சியில், கேரள பிராமண சபை மாநிலத்தலைவர் கணேஷ், ஒருங்கிணைப்பாளர் வைத்தியநாதன், நூரணி கிராம சமூகம் தலைவர் சிவராமகிருஷ்ணன், கேரளா பிராமண சபை மாவட்டத்தலைவர் கணேசன், செயலாளர் குமார் ஆகியோர் பேசினர்.