தமிழகத்தில் நிலச்சரிவு அபாயம் ஆய்வு செய்கிறது டில்லி நிறுவனம்
தமிழகத்தில் நிலச்சரிவு அபாயம் ஆய்வு செய்கிறது டில்லி நிறுவனம்
UPDATED : மே 22, 2025 03:10 AM
ADDED : மே 22, 2025 12:49 AM

சென்னை:கோவை, நீலகிரி உள்ளிட்ட, 5 மாவட்டங்களில், நிலச்சரிவுக்கான வாய்ப்பு கள் குறித்து ஆராய்ந்து, அதை தடுப்புக்கான வழிமுறைகளை பரிந்துரைக்க, டில்லியை சேர்ந்த ஒரு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பருவமழைக்காலங்களில், நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்படுவது உண்டு.
மலைப்பகுதிகளில் சாலையோரங்களில், 'ரீடெய்னிங் வால்' எனப்படும் தடுப்புச்சுவர் அமைப்பது மட்டுமே, தற்போது வரை தீர்வாக பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு, கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு, இந்த விஷயத்தில் உள்ள அபாயத்தை சுட்டிக்காட்டுவதாக அமைந்தது. யாரும் எதிர்பார்த்திராத வகையில், வடகிழக்கு பருவமழையின்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு, 7 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, தமிழகத்தில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை கணக்கெடுக்கும் பணிகளை, அரசு முடுக்கி விட்டுள்ளது. அதீத மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள் மட்டுமல்லாது, நிலச்சரிவு வாய்ப்புள்ள இடங்களை வரைபடமாக தயாரிக்க, பேரிடர் மேலாண்மை ஆணையம் வாயிலாக, தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, பேரிடர் மேலாண்மை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், சேலம் மாவட்டம் ஏற்காடு, திருப்பத்துார் மாவட்டம் ஏலகிரி ஆகிய பகுதிகளில், மழைக் காலங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
இப்பகுதிகளில், கனமழை காரணமாக நிலச்சரிவு அபாயம் குறித்து, அறிவியல்பூர்வ ஆய்வு மேற்கொள்ள, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இப்பணிகளை மேற்கொள்ள, டில்லியை சேர்ந்த, எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் மன்றம்' என்ற அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்கள் குறித்த துல்லிய தகவல்களை திரட்டுவதுடன், அதை தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை, இந்நிறுவனம் பரிந்துரைக்கும். இதன் அடிப்படையில், நிலச்சரிவு தடுப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.