ADDED : அக் 23, 2025 12:25 AM
டில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று சந்தித்த தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள், 'இட்லி, தோசை மாவுக்கான ஜி.எஸ்.டி.,யை ரத்து செய்ய வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர்.
தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மற்றும் நிர்வாகிகள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை டில்லியில் நேற்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், ஜி.எஸ்.டி.,யை இரண்டு அடுக்குகளாக மாற்றியதற்கு வரவேற்பு தெரிவித்தனர்.
கடந்த, 2017 - 24 வரையிலான ஜி.எஸ்.டி., பிரச்னைகளுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பி வணிகர்களை தண்டிப்பதை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
அதே போன்று, ஜி.எஸ்.டி., வரம்பை, 40 லட்சம் ரூபாயில் இருந்து, 2 கோடி ரூபாய் விற்பனை வரம்புக்கு மாற்ற வேண்டும், இணக்க வரியை 1.50 கோடி ரூபாயில் இருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தினர்.
இட்லி, தோசை மாவுக்கான ஜி.எஸ்.டி.,யை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும். டீ கடை, ஹோட்டல்களுக்கான வணிக பயன்பாட்டு சிலிண்டருக்கான ஜி.எஸ்.டி.,யை ரத்து செய்யவும் கோரிக்கை விடுத்தனர்.
- நமது சிறப்பு நிருபர் -