தொழில் பூங்காக்களில் குடியிருப்புகளுக்கு 30 சதவீத நிலம் ஒதுக்க வலியுறுத்தல்
தொழில் பூங்காக்களில் குடியிருப்புகளுக்கு 30 சதவீத நிலம் ஒதுக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 17, 2025 01:07 AM
சென்னை:'தமிழகத்தில் தொழில் பூங்காக்கள் உருவாக்கும்போது, குடியிருப்புகளுக்கு 30 சதவீதம் இடம் ஒதுக்கினால், பணியாளர்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தி கொடுக்கலாம். அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் சிறு தொழில்களை ஊக்குவிக்க, பல்வேறு பகுதிகளில், தொழிற்பேட்டைகள் ஏற்படுத்தப்பட்டன.
இதில், பணியாளர்கள் வீடு கட்டி வசிக்க, 20 சதவீதம் இடம் ஒதுக்குவது வழக்கமாக இருந்தது. நாளடைவில் தொழிற்பேட்டைகள் நலிந்த நிலையில், பெரிய நிறுவனங்கள் அதில் இடம் வாங்கி செயல்படத் துவங்கி உள்ளன.
அரசு துறைகள் வாயிலாக, பெரிய தொழில் நிறுவனங்கள் வருகையை ஊக்கப்படுத்த, தொழில் பூங்காக்கள் உருவாக்கப்பட்ட நிலையில், தற்போது தனியாரும் தொழில் பூங்காக்கள் உருவாக்க விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
இதற்காக நகர், ஊரமைப்பு சட்டத்தில், பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாது, தொழில் பூங்காக்களில் கட்டப்படும் கட்டடங்களுக்கு, விதிகளில் தளர்வு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரானா மற்றும் ஊரடங்கு காலத்தில், வெளி மாநிலத் தொழிலாளர்கள், இடம் பெயர்வதில் பிரச்னை ஏற்பட்டது. இதை கருத்தில் வைத்து வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கான வாடகை வீட்டுவசதி திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
இதன் அடிப்படையில், சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதுார், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், ஆகிய இடங்களில், பெரிய தொழில் நிறுவனங்கள், தொழில் பூங்காக்களுக்கு, வெளியில் நிலம் வாங்கி, தொழிலாளர்களுக்கான வாடகை வீட்டுவசதியை ஏற்படுத்தி உள்ளன.
இதற்கு தொழிலாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே, தொழில் பூங்காக்கள் உருவாக்கும்போது, குடியிருப்புகளுக்கு 30 சதவீதம் நிலம் ஒதுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:
தமிழகத்தில் புதிதாக அமைக்கப்படும் தொழில் பூங்காக்கள், ஊருக்கு வெளியில் அமைக்கப்படுகின்றன. இப்பகுதிகளுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து, தொழிலாளர்கள் வாகனங்கள் வாயிலாக அழைத்து வரப்படுகின்றனர்.
இதன் காரணமாக, தொழில் பூங்காக்களை ஒட்டிய கிராமங்களில், ரியல் எஸ்டேட் வளர்ச்சி அதிகரிக்கிறது.
இந்நிலையில் தொழில் பூங்காக்களில், 30 சதவீத நிலத்தை குடியிருப்பு பயன்பாட்டுக்கு ஒதுக்கும் புதிய திட்டத்தை, மஹாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது. இதை தமிழக அரசும் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விரைவில், இது தொடர்பான புதிய திட்டங்கள் தயாரித்து, அரசுக்கு அனுப்பப்படும்' என்றார்.