ஏழை பெண்கள் நிலம் வாங்க கடன் ரூ.10 லட்சமாக உயர்த்த வலியுறுத்தல்
ஏழை பெண்கள் நிலம் வாங்க கடன் ரூ.10 லட்சமாக உயர்த்த வலியுறுத்தல்
ADDED : நவ 23, 2025 01:43 AM
சென்னை: நிலமற்ற ஏழை பெண் விவசாய தொழிலாளர்கள் நிலம் வாங்க, கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் கடன் தொகையை, 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் கூட்டுறவு துறை கீழ் செயல்படும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில், நகைக்கடன், சுயஉதவிக் குழு கடன் என, பல்வேறு பிரிவுகளில் கடன்கள் வழங்கப்படுகின்றன.
வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ள நிலமற்ற ஏழை பெண் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, நிலம் வாங்க, கடன் வழங்கும் திட்டம், கடந்த ஜூலையில் துவக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், 2 ஏக்கர் விவசாய நிலம் வாங்க, 5 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. கடன் வாங்கி நிலம் வாங்குவோர், சிறுதானிய சாகுபடி, கால்நடை மேய்ச்சல் போன்ற தொழில்களில் ஈடுபடலாம்.
இதுவரை, 100 பேருக்கு நிலம் வாங்க கடன் வழங்கப்பட்ட நிலையில், பலரும் கடன் கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.
இது குறித்து, பெண் விவசாயிகள் கூறியதாவது:
தென் மாவட்டங்கள் உட்பட மாநிலம் முழுதும், நிலத்தின் மதிப்பு அதிகமாக உள்ளது. 5 லட்சம் ரூபாய்க்கு, 5 சென்ட் நிலம் கூட வாங்க முடிவதில்லை.
இதனால் வங்கியில் கடன் வாங்குவதுடன், மீதி பணத்திற்கு தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே, பெண் தொழிலாளர்கள் உண்மையிலேயே நிலம் வாங்கி பயன்பெற, கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் கடன் தொகையை, 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

