எகிறுது பயிர்களுக்கான உரச்செலவு; ஜி.எஸ்.டி.,யை 5 சதவீதமாக குறைக்க கோரிக்கை
எகிறுது பயிர்களுக்கான உரச்செலவு; ஜி.எஸ்.டி.,யை 5 சதவீதமாக குறைக்க கோரிக்கை
ADDED : நவ 21, 2025 06:37 AM

மதுரை: 'பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி.,யில் பாகுபாடு உள்ளது. நுண்ணுாட்ட உரங்கள், பயோ பூச்சிக்கொல்லிகளுக்கு விதிக்கப்படும் இருவேறு வரியை நீக்கி 5 சதவீதமாக குறைக்க வேண்டும ் ' என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு நுண்ணுாட்ட உரங்கள், பயோ உரங்கள் உற்பத்தியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் மகாலிங்கம் கூறியதாவது:
பயோ பூச்சிக்கொல்லி மீது 5 சதவீதம் ஜி.எஸ்.டி., அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உரக்கட்டுப்பாட்டு ஆணையில் சிறப்பு உரங்களாக உள்ள பாஸ்போ ஜிப்சம், உயிரி துாண்டுதல்கள் ஆகியவற்றிற்கு ஜி.எஸ்.டி., வரிக்குறைப்பு குறிப்பிடவில்லை. இதனால் பயோ நுண்ணுாட்ட உரங்கள், உயிர் ஊக்கி, பயோ பூச்சிக்கொல்லிகளுக்கு இருவேறு வரி விதிக்கப்படுவதால் குழப்பம் ஏற்படுகிறது.
கடற்பாசி உரங்கள், ஹியூமிக் அமிலம், அமினோ அமிலம், புல்விக் அமிலம், புரத ஹைட்ரோலைசேட்கள், நுண்ணுயிர் உரங்கள், உயிரி துாண்டுதல்கள் போன்றவை இயற்கை விவசாயத்திற்கு முக்கியமானவை.
ரசாயன உர பயன்பாட்டை குறைத்து விளைச்சலை அதிகப்படுத்தும். வறட்சி, உப்புத்தன்மை, காலநிலை மாற்றத்தை பயிர்கள் எதிர்கொள்ள உதவும். மண் ஆரோக்கியத்தையும், கரிமப்பொருட்களையும் மீட்டெடுக்கும்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நுண்ணுாட்ட உரங்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படுகிறது. விவசாயிகள் கூடுதல் விலையால் இந்த உரங்களை வாங்குவதை நிறுத்தியுள்ளதால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகிறோம்.
அட்டவணை பட்டியல் ஆறில் உள்ள கடல் களையில் இருந்து தயாரிக்கப்படும் 'சீ வீடு' உயிரி ஊக்கி வகைக்கு 5 சதவீதம், அதே அட்டவணையில் உள்ள ஹியூமிக், புல்விக் அமிலங்கள், விட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடென்ட் போன்ற 10 வகையான உயிர் ஊக்கிகளுக்கு 18 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது.
பேசில் லஸ், டிரைகோடெர்மா வகைகள், சூடோமோனஸ் உட்பட 12 வகையான பயோ பூச்சிக்கொல்லிகள் 5 சதவீத வரி பட்டியலிலும், பசிலோமைஸ், வெர்ட்டிசீலியம், பேசில்லஸ் வகையைச் சேர்ந்த 10 வகையான பயோ பூச்சிக்கொல்லிகள் 18 சதவீத வரி பட்டியலில் உள்ளன.
உரக் கட்டுப்பாடு ஆணை அட்டவணைகளின் படி உயிரி ஊக்கிகள், பாஸ்போ ஜிப்சம் போன்ற சிறப்பு உரங்கள், பயோ பூச்சிக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் அனைத்திற்கும் ஜி.எஸ்.டி., வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

