பத்திரிகைத்துறை இல்லை என்றால் ஜனநாயகம் இறந்துவிடும்; முதல்வர் ஸ்டாலின்
பத்திரிகைத்துறை இல்லை என்றால் ஜனநாயகம் இறந்துவிடும்; முதல்வர் ஸ்டாலின்
ADDED : மே 03, 2025 03:15 PM

சென்னை: ''அச்சமற்ற பத்திரிகைத்துறை இல்லை என்றால் ஜனநாயகம் இருளில் இறந்துவிடும் என்பதை நமக்குநாமே நினைவுபடுத்திக் கொள்வோம்.'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியா 151வது இடத்திற்கு சரிந்துள்ளது ஏன் ?
ஏனெனில் கேள்விகளுக்கு பா.ஜ., ஆட்சி அஞ்சுகிறது. செய்தி அறைகளை சோதனை செய்யும் அக்கட்சி, பத்திரிகையாளர்களை சிறையில் அடைக்கிறது. ஊழல், மனித உரிமை மீறல்கள் மற்றும் அதன் மறைமுக திட்டங்களை அம்பலப்படுத்துபவர்களின் குரல்களை ஒடுக்குகிறது.
அச்சமற்ற பத்திரிகைத்துறை இல்லை என்றால் ஜனநாயகம் இருளில் இறந்துவிடும் என்பதை இந்த உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்வோம்.
ஊடகங்களுக்கு மட்டும் அல்ல, ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்மையை அறிய கேள்வி கேட்க, அதிகாரத்திற்கு எதிராக பேசுவதற்கான உரிமைக்காக நாம் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.