பொது மயானத்தை ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் பயன்படுத்த அனுமதி மறுப்பது தீண்டாமையே: ஐகோர்ட் கண்டனம்
பொது மயானத்தை ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் பயன்படுத்த அனுமதி மறுப்பது தீண்டாமையே: ஐகோர்ட் கண்டனம்
ADDED : பிப் 21, 2026 06:52 AM

சென்னை: 'பொது மயானத்தை, ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்த அனுமதி மறுப்பது, தீண்டாமைக்கு சமம்' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துஉள்ளது.
ஈரோடு மாவட்டம், கருமாண்டி செல்லிப்பாளையம் கிராமத்தில் உள்ள வண்டிப்பாதை நிலத்தை, மயானமாக மாற்றக் கோரியும், மயானம் என வரையறுக்கப்பட்ட இடத்தில், உடல் அடக்கம் செய்யப்படுவதை உறுதி செய்ய கோரியும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த, நீதிபதி வி.லட்சுமிநாராயணன் பிறப்பித்த உத்தரவு:
கருமாண்டி செல்லிப்பாளையத்தில் சர்ச்சைக்குரிய நிலம், வண்டிப்பாதை புறம்போக்கு என, வகைப்படுத்தப்பட்டு உள்ளது. எனினும், 70 ஆண்டுகளுக்கும் மேலாக மயானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, அங்கு வசிக்கும் அருந்ததியர் சமூகத்தினர், இந்த நிலத்தில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பயன்படுத்தி வருகின்றனர். சர்ச்சைக்குரிய நிலம் குறித்து, மாவட்ட கலெக்டரால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை கவலை அளிக்கிறது.
ஏனெனில், மயானமாக பயன்படுத்தும் இடத்தில், அடக்கம் செய்யப்பட்ட உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு, இயந்திரங்கள் உதவியுடன், தனி நபர்களால் சமன் செய்யப்பட்டு உள்ளன.
ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள், பொதுவாக உள்ள மயானம் அல்லது தகனம் செய்யும் இடத்துக்கு செல்ல அனுமதி மறுப்பது குற்றம். இது, தீண்டாமையின் ஒரு வடிவம். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 17க்கும் முரணானது.
பொதுவாக உள்ள மயானத்தை பயன்படுத்த, அனுமதி மறுப்பதும், அங்குள்ள கல்லறைகளை சிதைப்பதும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் குற்றம்.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், கல்லறைகளை சேதப்படுத்திய நபர்கள் மீது, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருந்தும், அதைச்செய்ய அவர் தவறி விட்டார்.
வாழும் போது கண்ணியத்துடன் வாழ உரிமை உள்ளது போல, இறந்தவர்களுக்கு கண்ணியத்துடன், இறுதி சடங்கு செய்வதும் உரிமை.
எனவே, சம்பந்தப்பட்ட நிலத்தில் உள்ள மயானம், எவ்வித ஆக்கிரமிப்பு அல்லது குப்பை கொட்டும் பகுதியாக மாறாமல் இருக்க, தேவையான நடவடிக்கையை, கருமாண்டி செல்லிப்பாளையம் சிறப்பு பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட கலெக்டர் நட வ டிக்கை எடுக்க வேண்டும்.
சர்ச்சைக்குரிய நிலத்தை, வண்டிப்பாதை என்ற வகைப்பாட்டிலிருந்து நீக்கி, மயானம் என உடனே மாற்ற வேண்டும். மயானத்தை சுற்றி, வேலி அமைத்து பாதுகாக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
மயானத்தில் இருந்த கல்லறைகளை சேதப்படுத்திய நபர்கள் மீது, சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அ தில் கூறப்பட்டுள்ளது.

