மாநில நிதி உரிமையை பறிப்பது ஆக்சிஜனை நிறுத்துவதற்கு சமம் பிரதமர் மோடி மீது ஸ்டாலின் பாய்ச்சல்
மாநில நிதி உரிமையை பறிப்பது ஆக்சிஜனை நிறுத்துவதற்கு சமம் பிரதமர் மோடி மீது ஸ்டாலின் பாய்ச்சல்
ADDED : பிப் 08, 2024 10:10 PM
சென்னை:''பிரதமர் மோடி மாநிலங்களை, முனிசிபாலிட்டிகளை போல நினைக்கிறார். மாநிலங்கள் இருப்பதோ, மாநிலங்களுக்கு முதல்வர்கள் இருப்பதோ அவருக்கு பிடிக்கவில்லை. மாநிலங்களின் நிதி உரிமையை பறிப்பது, ஆக்சிஜனை நிறுத்துவதற்கு சமம்,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
மத்திய அரசின் பாரபட்சமான நிதி ஒதுக்கீட்டை கண்டித்து, கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், நேற்று டில்லியில் நடந்த போராட்டத்தை ஆதரித்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
நிதி பகிர்வில் தங்களின் மாநிலத்திற்கு பாரபட்சம் காட்டப்படுவதற்கு எதிராக, எல்லா மாநிலங்களும் போராட்டம் நடத்துகிற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. இதற்கு காரணமான மத்திய பா.ஜ., அரசு, மக்கள் மன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய நாள், வெகு தொலைவில் இல்லை.
மாநிலங்களை, மாநில மக்களை மதிக்கிறவர்களாக, முந்தைய பிரதமர்கள் இருந்தனர். ஆனால், பிரதமர் மோடி, மாநிலங்களை முனிசிபாலிட்டிகளை போல நினைக்கிறார். மாநிலங்கள் இருப்பதோ, முதல்வர்கள் இருப்பதோ அவருக்கு பிடிக்கவில்லை.
இத்தனைக்கும் குஜராத் மாநில முதல்வராக இருந்து பிரதமரானவர். பிரதமரானதும் அவர் செய்த முதல் செயல், மாநிலங்களின் உரிமையை பறித்தது தான்; நிதி உரிமையை பறித்தார்; கல்வி உரிமையை பறித்தார்; மொழி உரிமை மற்றும் சட்ட உரிமையை பறித்தார்.
மாநிலங்களின் நிதி உரிமையை பறிப்பது, ஆக்சிஜனனை நிறுத்துவதற்கு சமம். அதைத்தான் பா.ஜ., அரசு செய்து வருகிறது. இது, ஏதோ எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நடக்கிறது என, பா.ஜ., முதல்வர்கள் நினைக்க வேண்டாம்.
நாளை உங்கள் மாநிலங்களுக்கும் இதே கதிதான். பா.ஜ., அரசின் எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக, தமிழக அரசு உறுதியுடன் போராடி வருகிறது. அதே பாணியில், கேரள முதல்வரும் போராடி வருகிறார்.
ஜி.எஸ்.டி., வரி விதிப்புக்கு பின், மாபெரும் நிதி நெருக்கடி பேரிடரை, எல்லா மாநில அரசுகளும் சந்திக்கின்றன. அனைத்து மாநில அரசுகளையும் ஒன்றிணைத்து ஆளக்கூடிய மத்திய அரசு, இந்த நிதி நெருக்கடியை நீக்குகிற வகையில் செயல்பட வேண்டும்; அப்படி செயல்படவில்லை.
மாநிலங்களின் வளர்ச்சி பணிகளுக்காக, கடன் வாங்குவதற்கு கூட தடையை ஏற்படுத்துகின்றனர். மக்களுக்கு எல்லா நன்மைகளையும் செய்வது, மாநில அரசுகள் தான்.
மாநில அரசிடம் தான் அனைத்து அன்றாடத் தேவைகளையும், மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்கு பா.ஜ., அரசு முட்டுக்கட்டை போடுகிறது. இதை எல்லாரும் ஒன்று சேர்ந்து எதிர்த்தாக வேண்டும்.
'இண்டியா' கூட்டணி கட்சிகள், நம்முடைய ஒற்றுமையின் வழியாக, இந்திய அரசை கைப்பற்றி, பாசிச பா.ஜ.,வுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். அனைத்து மாநிலங்களையும் மதிக்கும், சமமாக நடத்தும் கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.

