கூட்டணி கட்சியினர் விட்டு கொடுக்க வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி பேச்சு
கூட்டணி கட்சியினர் விட்டு கொடுக்க வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி பேச்சு
ADDED : பிப் 03, 2025 12:10 AM

ராமநாதபுரம்; ''கபடி என்பது ஒரு குழு விளையாட்டு. அனைவரும் ஒன்று சேர்ந்து விளையாடுவது போன்று தி.மு.க.,வினர், அதன் கூட்டணி கட்சியினர் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுக்க வேண்டிய நேரத்தில் விட்டு கொடுக்க வேண்டும்,'' என, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் துணை முதல்வர் உதயநிதி பேசினார்.
ராமநாதபுரம் தி.மு.க., நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்க வந்த துணை முதல்வர் உதயநிதி ராமேஸ்வரம் ரோடு பிரப்பன் வலசை கடற்கரை ரூ.42 கோடியில் சர்வதேச வாட்டர் ஸ்போர்ட்ஸ் அகாடமி அமைக்கப்படும் இடத்தை ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது: பிரப்பன்வலசை கடற்கரையில் வாட்டர் ஸ்போர்ட்ஸ் அகாடமி அமைப்பதற்காக 2024--25 பட்ஜெட்டில் முதல்வர் ஸ்டாலின் ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இப்பகுதி கடற்கரை என்பதால் கடலோர ஒழுங்கு முறை ஆணையத்தில் அனுமதி பெற வேண்டிய நிலை இருந்தது.
தற்போது அனுமதி பெறப்பட்டுள்ளது. பிப்., 5ல் சர்வதேச தரத்திலான வாட்டர் ஸ்போர்ட்ஸ் அகாடமி அமைக்கும் பணி துவங்கும். இங்கு தங்கும் விடுதி, சர்ப்பிங், கயாக்கிங், ஸ்டேண்டப் பெடலிங் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இதுவரை அலை சறுக்கு போட்டிகள் சென்னையில் நடத்தப்பட்டு வந்தது. பிரப்பன் வலசையில் அகாடமி அடுத்தாண்டு ஜனவரிக்குள் அமைக்கப்பட்டு சர்வதேச தரத்தில் பயிற்சிகள் வழங்கப்படும் என்றார்.
கீழக்கரையில் நடந்த கபடி வீரர்களுக்கான ெஹல்த் இன்சூரன்ஸ் கார்டு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது: விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்துள்ளோம். சிறந்த கபடி வீரர்களை உருவாக்கி வரும் மாவட்டமாக ராமநாதபுரம் திகழ்கிறது. தமிழகத்திலுள்ள அனைத்து சிறந்த கபடி வீரர்களுக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கபடி என்பது ஒரு குழு விளையாட்டு. அனைவரும் ஒன்று சேர்ந்து விளையாடுவது போன்று தி.மு.க.,வினர், அதன் கூட்டணி கட்சியினரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு விட்டுக்கொடுக்க வேண்டிய நேரத்தில் விட்டுக் கொடுக்க வேண்டும். 2026 சட்டசபைத்தேர்தலிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றார்.------