ADDED : மார் 11, 2024 04:47 AM
சென்னை : நவீன தொழில்நுட்ப கருவிகள் வழியே அளவீடு செய்யப்பட்ட கோவில் நிலங்களை, புவிசார் தகவல் அமைப்பில் குறியீடு செய்து, இணையதளத்தில் பொதுமக்கள் பார்வையிடும் வசதியை அறநிலையத்துறை துவக்கியுள்ளது.
ஹிந்து சமய அறநிலையத்துறை, 2021 மே 7 முதல், நேற்று முன்தினம் வரை, தனி நபர் ஆக்கிரமிப்பில் இருந்த, 5,953.36 கோடி ரூபாய் மதிப்பிலான, 6,809.07 ஏக்கர் நிலங்களை மீட்டுள்ளது.
தனி நபர் பெயரில் தவறுதலாக பட்டா பெயர் மாற்றப்பட்டிருந்த, 4,759.26 ஏக்கர் நிலங்கள், கோவில் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கணினி சிட்டாவில் தவறுதலாக உள்ள, கோவில்களின் பெயர்களை சரி செய்ய உத்தரவு பெறப்பட்டு, 3,879.13 ஏக்கர் நிலங்களுக்கான, கோவில் பெயர் விவரம் சிட்டாவில் மாற்றப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்ப கருவியான, டி.ஜி.பி.எஸ்., வழியே, கோவில் நிலங்களை அளவீடு செய்து பாதுகாக்க, நில அளவை பணி, 2021ல் துவக்கப்பட்டது. இதுவரை, 1.62 லட்சம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, எல்லை கற்கள் நடப்பட்டு நிலங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
கோவில் நிலங்களுக்கு, புலப்படங்கள் தயார் செய்யப்படுவதோடு, அவை புவிசார் தகவல் அமைப்பில் குறியீடு செய்யப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக, 29 மாவட்டங்களில் உள்ள, 146 கோவில்களுக்கு சொந்தமான, 2,015.17 ஏக்கர் நிலங்களின் புகைப்படங்கள், புவிசார் தகவல் அமைப்பில் குறியீடு செய்யப்பட்டு உள்ளன.
அளவீடு செய்யப்பட்ட கோவில் நிலங்களை, புவிசார் தகவல் அமைப்பில் குறியீடு செய்து, ஹிந்து சமய அறநிலைய துறையின், https://hrce.tn.gov.in என்ற இணையதளத்தில், பொதுமக்கள் பார்க்கும் வசதி துவக்கப்பட்டுள்ளது.

