ADDED : ஜூலை 13, 2025 02:19 AM

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், வழக்கமாக உட்காரும் இருக்கை அருகிலுள்ள சோபாவின் கீழ் பகுதியில் ஒட்டு கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்தது, சமீபத்தில் கண்டறியப்பட்டதாக ராமதாஸ் தெரிவித்தார்.
லண்டனில் வாங்கப்பட்ட விலை உயர்ந்த அந்த கருவியை வைத்ததன்; பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இதையொட்டி, அவர் வழக்கமாக உட்காரும் இருக்கைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. புதியதாக நேற்று இருக்கைகள் போடப்பட்டு, அதில் ராமதாஸ் உட்கார்ந்தார்.
இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த தனியார் துப்பறியும் ஏஜென்சியை சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை 10:30 மணியிலிருந்து தொடர்ந்து தைலாபுரம் தோட்டத்தில் தீவிர சோதனை நடத்தினர்.
ஒட்டு கேட்கும் கருவி எப்போது பொருத்தப்பட்டது; அதன் மூலம் என்னென்ன தகவல்கள், யார் யாருக்கு பரிமாறப்பட்டன என்பன உள்ளிட்ட விவரங்களை அந்த குழுவினர் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து ராமதாஸ் கூறியதாவது:
ஒட்டு கேட்பு கருவி தொடர்பாக, தைலாபுரம் தோட்டத்தில் ஆய்வு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்த பிறகு, தனியார் ஏஜென்சி கொடுக்கும் அறிக்கை அடிப்படையில் சட்டப்பூர்வ நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.
பொதுக்குழு கூட்டுவதற்கான காலம் வரவில்லை. அந்த சமயத்தில் தகவல் தெரிவிக்கப்படும். இந்த பிரச்னையில் யார் மீதாவது உங்களுக்கு சந்தேகம் இருக்கிறதா என கேட்கின்றனர். சந்தேகம் இருக்கிறது.
ஆனாலும், ஆய்வு நடத்தும் தனியார் ஏஜென்சி கொடுக்கும் ஆய்வு அறிக்கைக்குப் பின் தான், எந்த முடிவுக்கும் வர முடியும்.
ஆனால், யாராக இருந்தாலும், இந்த விஷயத்தில் தப்ப முடியாது. கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
-- நமது நிருபர் -