ஊட்டி, குன்னூர் சுற்றுப்பு பகுதிகளில் போலீசாரால் பக்தர்கள் வேதனை
ஊட்டி, குன்னூர் சுற்றுப்பு பகுதிகளில் போலீசாரால் பக்தர்கள் வேதனை
ADDED : ஜன 22, 2024 11:26 PM

ஊட்டி:ஊட்டி, குன்னுார் சுற்றுப்பு பகுதிகளில், கோவிலில் பிரசாதம் வழங்குவதை தடுக்க வந்த போலீசாரால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி லோயர் பஜார் பகுதியில் உள்ள விட்டோபா கோவிலில் அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. கோவில் அறங்காவலர்கள் சபா உறுப்பினர்கள், இளைஞர் நல சங்க உறுப்பினர்கள், காந்தள் துக்காரம் பஜனை மடாலயம், அம்பா பவானி மகளிர் மற்றும் திரளான பொதுமக்கள் பங்கேற்ற பஜனை நிகழ்ச்சி நடந்தது.
பஜனை நிகழ்ச்சி முடிந்ததும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க கோவில் நிர்வாகத்தினர் தயாராகினர். அப்போது, அங்கு வந்த பி-1 இன்ஸ்பெக்டர் முரளிதரன், 'அன்னதானம், பிரசாதம் எதுவாக இருந்தாலும் கோவிலுக்குள் வைத்து வழங்க வேண்டும்,' என,கோவில் நிர்வாகிகளிடம் தெரிவித்தார். பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
'கோவில் வளாகத்தில் பிரசாதம் வழங்குவதை தடுக்க கூடாது,' என, தெரிவித்தனர். தகவலின் பேரில், பா.ஜ., மாவட்ட தலைவர் மோகன்ராஜ், ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் வேலுசாமி ஆகியோர் அங்கு வந்தனர். 'கோவில் வளாகத்திற்குள் தான் பிரசாதம் வழங்க உள்ளோம்; இதை தடுக்க கூடாது,' என, தெரிவித்தனர்.
போலீசார் பிரசாதம் வழங்குவதை தடுக்கும் நோக்கில், பல்வேறு காரணங்களை பேசிவந்ததால் சிறிது நேரம், இரு தரப்பினர் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின், போலீசார் முன்னிலையில் வளாகத்தில் அமைதியாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
குன்னுார்:குன்னுார் பெட்போர்டு விநாயகர் கோவிலில் பா.ஜ.,வினர் பூஜைகள் நடத்தி அன்னதானம் வழங்க முற்பட்டனர். அப்போது, அங்கு வந்த போலீசார், 'பொது இடத்தில் அன்னதானம் வழங்க கூடாது,' என, தடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து, டி.எஸ்.பி., குமார் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையின் போது, 'எஸ். பி., மைக்கில் அன்னதானம் வழங்க கூடாது,' என, தெரிவித்தார். மீண்டும் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின், பா.ஜ.,வினர் அன்னதானம் வழங்கினர்.
* அதேபோல, 'உபதலை ராமர் கோவிலில் மைதானத்திற்கு பக்தர்கள் செல்ல கூடாது; எல்.சி.டி.,யில் நேரடி ஒளிபரப்பு காண்பிக்க கூடாது,' என, போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவு குறித்து சிலர் தெரிவித்ததால், ஒளிபரப்ப அனுமதிக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் பக்தர்களை கவலை அடைய செய்தது. கோவில்களில் திடீரென நடந்த போலீசார் கெடுபிடியால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.