சபரிமலையில் குவியும் பக்தர்கள்; இதுவரை 17 லட்சம் பேர் தரிசனம்
சபரிமலையில் குவியும் பக்தர்கள்; இதுவரை 17 லட்சம் பேர் தரிசனம்
ADDED : டிச 08, 2024 07:30 AM

சபரிமலை: சபரிமலையில் மண்டல காலத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில் இதுவரை, 17 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
மண்டலகாலம் துவங்கிய பின், 18 நாட்களில் 35,000 பேர் காட்டுப்பாதைகளில் சபரிமலை வந்துள்ளனர். வண்டிப்பெரியாறு, சத்திரம், புல் மேடு பாதை வழியாக 18,952 பேரும், எருமேலி, கரிமலை,- அழுதை, முக்குளி வழியாக 18,317 பக்தர்களும் வந்துள்ளனர்.
கனமழை காரணமாக டிச., 2, 3ல் இந்த இரு பாதைகளிலும் பக்தர்கள் செல்வது தடை செய்யப்பட்டிருந்தது. கடந்த இரு நாட்களாக சபரிமலையில் கூட்டம் அலைமோதுகிறது. இதுவரை 17 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
டிச., 6ல் 89,840 பேர் தரிசனம் செய்துள்ளனர். இதில், 17,425 பேர் 'ஸ்பாட் புக்கிங்'கில் தரிசனத்திற்கு வந்தவர்கள். இனி வரும் நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பக்தர்கள் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் வரும்படியும், வர முடியாதவர்கள் தங்கள் முன்பதிவை ரத்து செய்ய வேண்டும் என தேவசம்போர்டும், போலீசும் இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளன.
டிச. 11ல் பலத்த மழை எச்சரிக்கை
சபரிமலை மற்றும் பம்பை ஆகியன பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளன. குமுளி புல் மேடு பாதை மற்றும் எருமேலி, பெருவழி பாதையின் ஒரு பகுதி, இடுக்கி மாவட்டத்தில் வருகிறது.
இந்த இரு மாவட்டங்களிலும் டிச., 11ல் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து, மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு 64.5 முதல் 115.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.