கனகசபை மீது பக்தர்கள் தரிசன திட்டம் தாக்கல் செய்ய தீட்சிதர்களுக்கு அவகாசம்
கனகசபை மீது பக்தர்கள் தரிசன திட்டம் தாக்கல் செய்ய தீட்சிதர்களுக்கு அவகாசம்
ADDED : நவ 29, 2024 01:30 AM
சென்னை:சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மண்ட பத்தில் இருந்து, பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான நேரம், வழிமுறைகள் குறித்த திட்டத்தை தாக்கல் செய்ய, டிசம்பர், 12 வரை பொது தீட்சிதர்கள் தரப்புக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.
கடலுார் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபை மண்டபத்தில் மீது ஏறி, பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி அளித்து, தமிழக அரசு கடந்த 2022 மே, 15ல் அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து, அங்குள்ள சபாநாயகர், கோவில் செயலர் சிவராம தீட்சிதர் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்த போது, 'ஆறு கால பூஜை நேரங்கள் தவிர்த்து, மற்ற நேரங்களில் கனகசபை மீது பக்தர்களை எப்படி அனுமதிப்பது, எந்த நேரத்தில் அனுமதிப்பது தொடர்பாக வழிமுறைகளுடன் ஒரு திட்டத்தை வகுத்து தாக்கல் செய்கிறோம்' என, பொது தீட்சிதர்கள் தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், திட்டத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பொது தீட்சிதர்கள் தரப்பில், கனகசபை மண்டபத்தில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்வது தொடர்பான திட்டத்தை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. மற்றொரு மனுதாரரான டி.ஆர்.ரமேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இவ்விவகாரத்தில் வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும்' என்றார்.
இதையடுத்து, 'சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வது தொடர்பாக, கோவிலை நிர்வகிக்கும் பொது தீட்சிதர்கள் முறைப்படுத்த வேண்டும் அல்லது ஹிந்து சமய அறநிலையத்துறை முறைப்படுத்த வேண்டும்.
இவ்விவகாரத்தில் திட்டம் வகுக்கப்பட்டால், பிரச்னைக்கு தீர்வு எட்டப்படும்' என்று கூறிய நீதிபதிகள், திட்டத்தை சமர்ப்பிக்க, பொது தீட்சிதர்கள் தரப்புக்கு டிச., 12 வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.