பிள்ளையார்பட்டியில் குவிந்த பக்தர்கள்; தங்ககவசத்தில் சுவாமி
பிள்ளையார்பட்டியில் குவிந்த பக்தர்கள்; தங்ககவசத்தில் சுவாமி
ADDED : ஜன 01, 2024 11:24 PM

பிள்ளையார்பட்டி : சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கற்பகவிநாயகரை தரிசனம் செய்தனர்.
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் தனுர்மாத பூஜை நடக்கிறது. சபரிமலை மற்றும் பழநி பக்தர்கள் தினமும் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து தரிசனம் செய்கின்றனர். இதனால் மதியம் நடை அடைக்கப்படாமல் பக்தர்களுக்காக கூடுதல் நேரம் நடை திறக்கப்பட்டுள்ளது.
நேற்று ஆங்கிலப்புத்தாண்டு என்பதால் கூடுதலாக பக்தர்கள் பிள்ளையார்பட்டியில் குவிந்தனர். நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறந்து தனுர்மாத பூஜை நடந்து, மூலவர் கற்பகவிநாயகர் தங்கக்கவசத்தில் அருள்பாலித்தார்.
உற்ஸவர் சன்னதிக்கு முன்பாக வெள்ளி மூஷிகவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மதியம் 1:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தன. மீண்டும் தங்கக்கவசத்தில் அருள்பாலித்த மூலவரை பக்தர்கள் தொடர்ந்து தரிசித்தனர். பக்தர்கள் தரிசனம் செய்ய கோயில் குளத்தைச் சுற்றிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து சென்றனர்.
1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட எஸ்.பி., அரவிந்த் தலைமையில் போலீசார் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி ராம.மெய்யப்பன், பூலாங்குறிச்சி சுப.முத்துராமன் செய்தனர்.

