திண்டுக்கல் மாவட்டத்தில் தேவாங்கு பாதுகாப்பு மையம்
திண்டுக்கல் மாவட்டத்தில் தேவாங்கு பாதுகாப்பு மையம்
ADDED : டிச 18, 2025 03:33 AM

சென்னை: திண்டுக்கல் மாவட்டம், அய்யலுாரில், தேவாங்கு பாதுகாப்புகாக, சிறப்பு மையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகம் உட்பட தென் மாநிலங்களில், தேவாங்குகள் அரிதாக காணப்படுகின்றன. இது தொடர்பாக, தெளிவான புள்ளி விபரங்கள் இல்லாத நிலையில், தமிழக அரசு சார்பில், 2022ல் தேவாங்கு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, தமிழகத்தில், 1,500 வரை தேவாங்குகள் இருப்பது தெரிய வந்தது. இவற்றில் பெரும்பாலானவை, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் காணப்படுகின்றன.
இதையடுத்து, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில், கடவூர் வனப்பகுதி தேவாங்குகள் காப்பகம், 2022ல் அறிவிக்கப்பட்டது. இங்கு, 29,160 ஏக்கர் பரப்பளவு, தேவாங்குகள் காப்பக பகுதியாக உள்ளது. பொது மக்கள் தேவாங்குகள் குறித்தும், அவற்றை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்தும் அறிந்து கொள்வதற்காக, திண்டுக்கல் மாவட்டம், அய்யலுார் பகுதியில், தேவாங்கு பாதுகாப்பு மையம் அமைக்க, பணிகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

