தமிழக சிறைகளில் கூடுதல் விலைக்கு உணவுப்பொருள் வாங்கியதில் ஆண்டுதோறும் ரூ.30 கோடி முறைகேடு
தமிழக சிறைகளில் கூடுதல் விலைக்கு உணவுப்பொருள் வாங்கியதில் ஆண்டுதோறும் ரூ.30 கோடி முறைகேடு
ADDED : மே 06, 2025 06:17 AM

மதுரை: தமிழக சிறைகளில் கைதிகளுக்கு வழங்குவதற்காக வாங்கப்படும் உணவுப்பொருட்களை, கூடுதல் விலைக்கு வாங்கியதாக பில் தயாரித்து கொடுத்து ஆண்டுதோறும் ரூ.30 கோடி வரை முறைகேடு செய்ததை டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் கண்டுபிடித்தார். இதன்காரணமாக மீண்டும் அந்தந்த மாவட்ட கூட்டுறவு பண்டகசாலையில் பொருட்கள் வாங்க உத்தரவிட்டார்.
சிறை கைதிகளுக்கு தினமும் 3 வேளை உணவு, வாரம் இருமுறை சிக்கன் போன்றவை வழங்கப்படுகிறது. இதற்கான உணவுப்பொருட்கள் அந்தந்த மாவட்ட கூட்டுறவு பண்டக சாலைகளில் வாங்கப்பட்டது.
பின்னர் தமிழ்நாடு பனைமரம் மற்றும் நார் சந்தைப்படுத்துதல் கூட்டுறவு கூட்டமைப்பு (டி.என்.பி.எப்.எம்.சி.எப்.) மூலம் உணவுப்பொருட்களை கொள்முதல் செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டது.
கடந்த மாதம் வரை பொருட்கள் வாங்கியதில் சிறைத்துறையில் ஆண்டுதோறும் ரூ.30 கோடி முறைகேடு நடந்தது டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
உதாரணமாக ஒரு தேங்காய் விலை ரூ.15 எனில், சிறை நிர்வாகத்திற்கு ரூ.45க்கு தரப்பட்டதாக கணக்கு காண்பிக்கப்பட்டது. இப்படி சந்தை விலையை விட ஒவ்வொரு பொருட்களின் விலையும் கற்பனை செய்ய முடியாத வகையில் விலை நிர்ணயிக்கப்பட்டு அரசிடம் இருந்து தொகை பெறப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள 50 ஆயிரம் கைதிகளுக்கு தினமும் உணவுப்பொருட்கள் வழங்க கூடுதல் விலைக்கு வாங்கியதாக கணக்கு காண்பிக்கப்பட்டு கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டது.
டி.ஜி.பி., அலுவலக அதிகாரிகள் சிலர் கூறியதாவது: கைதிகளுக்கு சிக்கன் வழங்க, கூடுதல் விலைக்கு இறைச்சி வாங்கப்பட்டதை அறிந்த டி.ஜி.பி., முறைகேட்டை தவிர்க்க உடனடியாக அனைத்து மத்திய சிறைகளிலும் சொந்தமாக கோழி பண்ணை அமைக்க உத்தரவிட்டார்.
அதேபோல் உணவுப்பொருட்கள் கொள்முதல் செய்தலில் முறைகேடுக்கு உடந்தையாக இருந்ததாக பெண் அலுவலர் உள்ளிட்ட சிலரை 'சஸ்பெண்ட்' செய்தார்.
தமிழ்நாடு பனைமரம் மற்றும் நார் சந்தைப்படுத்துதல் கூட்டுறவு கூட்டமைப்பு மூலம் அன்றாட பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வாங்கப்படுவதில்லை. பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பேக்கிங் செய்யப்பட்ட பொருட்கள் மட்டும் வாங்கப்படுகின்றன. மற்றவை அந்தந்த மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை மூலம் வாங்கிக்கொள்ளுமாறு கூறுகின்றனர்.
அதற்கான பில்லை டி.என்.பி.எப்.எம்.சி.எப்.க்கு அனுப்பினால் அவர்கள் குறிப்பிட்ட சதவீதத்தில் விலையை நிர்ணயித்து அரசுக்கு அனுப்பி தொகையை பெற்றனர். இதன்மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக சில நாட்களுக்கு முன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள், கூடுதல் விலைக்கு பொருட்கள் வாங்குவதை தவிர்க்க பழைய முறைபடி கூட்டுறவு பதிவாளரால் நிர்வகிக்கப்படும் அந்தந்த மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை மூலம் வாங்க உத்தரவிட்டார் என்றனர்.