சிறை காவலர்களை தேவையின்றி இடமாற்றாதீங்க டி.ஜி.பி., ரத்தோட் உத்தரவு
சிறை காவலர்களை தேவையின்றி இடமாற்றாதீங்க டி.ஜி.பி., ரத்தோட் உத்தரவு
ADDED : ஜூன் 22, 2026 03:55 AM
சென்னை: 'நிர்வாக காரணம் என்ற பெயரில், சிறைக்காவலர்களை தேவையின்றி பணியிட மாற்றம் செய்து, செயற்கையாக காலி பணியிடங்களை ஏற்படுத்தக் கூடாது' என, சிறைத்துறை டி.ஜி.பி., சந்தீப்ராய் ரத்தோட் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், ஒன்பது மத்திய சிறைகள் உட்பட, 141 சிறைகள் உள்ளன. இவற்றில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களின் பாதுகாப்புக்கு, சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் என, 5,000 பேர் பணியில் உள்ளனர். கைதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறைக்காவலர்கள் இல்லை.
இதனால், 'கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டும். நியாயமான காரணங்களுக்கு மட்டுமே இடமாற்றம் செய்ய வேண்டும். பணியின் போது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டால், அவற்றை சமாளிக்க பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்' என்பது உட்பட எட்டு விதமான கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை, சிறைத்துறை டி.ஜி.பி., சந்தீப்ராய் ரத்தோடுக்கு சிறைக்காவலர்கள் அனுப்பினர்.
இதையடுத்து, சிறைத்துறை அதிகாரிகளுக்கு, அவர் பிறப்பித்துள்ள உத்தரவு:
நிர்வாக காரணம் என்ற அடிப்படையில், சிறைக்காவலர்களை தேவையின்றி பணியிட மாற்றம் செய்யக்கூடாது. பணியிட மாற்றம் காரணமாக, செயற்கைத்தனமாக காலி பணியிடங்களை உருவாக்கி, அதில் தனக்கு வேண்டிய காவலர்களை பணியமர்த்துவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அதுபோன்ற செயலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
