பயங்கரவாதிகளுக்கு எதிரான 'ஆப்பரேஷன்' முடியல வெளிநாட்டு தொடர்பு, நிதியுதவி குறித்து விசாரணை டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தகவல்
பயங்கரவாதிகளுக்கு எதிரான 'ஆப்பரேஷன்' முடியல வெளிநாட்டு தொடர்பு, நிதியுதவி குறித்து விசாரணை டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தகவல்
ADDED : ஜூலை 12, 2025 12:37 AM

சென்னை:“பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் உள்ளிட்டோரின் வெளிநாட்டு தொடர்புகள் குறித்து விசாரணை நடக்கிறது,” என, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் கூறினார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
தமிழக காவல் துறையின், ஏ.டி.எஸ்., எனப்படும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், கோவை தொடர் குண்டு வெடிப்பு, மத ரீதியான கொலைகள் உள்ளிட்ட வழக்குகளில், 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதி அபுபக்கர் சித்திக்கை கைது செய்துள்ளனர்.
ஆப்பரேஷன் அறம்
அதேபோல, 29 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதி டெய்லர் ராஜா, 26 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முகமது அலி ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.
அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோரை கைது செய்ய, 'ஆப்பரேஷன் அறம்' என பெயரிட்டு, தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. டெய்லர் ராஜாவை பிடிக்க, 'ஆப்பரேஷன் அகழி' என பெயரிட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இவர்களின் இளமை கால புகைப்படங்கள் தவிர, வேறு எந்த தடயங்களும் எங்களிடம் இல்லை.
பயங்கரவாதிகள் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருவதும், இவர்கள் ஜவுளி, மளிகை வியாபாரம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது.
அதனால், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன், அபுபக்கர் சித்திக், முகமது அலி மற்றும் டெய்லர் ராஜா ஆகியோரின் படங்களை வரைந்து, அதன் அடிப்படையில், ஆந்திர மாநிலம் அன்னமய மாவட்டம், கடப்பா அருகே ராயச்சோட்டியில் பதுங்கி இருந்த அபுபக்கர் சித்திக்கும், முகமது அலியும், துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர்.
வெடிகுண்டுகள்
அதேபோல, கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியில் காய்கறி வியாபாரி போல பதுங்கி இருந்த டெய்லர் ராஜாவும் கைது செய்யப்பட்டார்.
அறிவியல் ரீதியான விசாரணை, நவீன தொழில்நுட்ப வசதிகள் அடிப்படையில், எங்களிடம் இருந்த விரல் ரேகையுடன் ஒப்பிட்டு பார்த்து, கைது செய்யப்பட்ட நபர்கள் அபுபக்கர் சித்திக், முகமது அலி மற்றும் டெய்லர் ராஜா தான் என்பதை உறுதி செய்துள்ளோம்.
ஆந்திராவில் அபுபக்கர் சித்திக் பதுங்கி இருந்த வீட்டில், ஏராளமான வெடிகுண்டுகள் மற்றும் பயங்கரவாத செயலுக்கான, 'டிஜிட்டல்' சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த பயங்கரவாதிகளின் வெளிநாட்டு தொடர்புகள் குறித்தும், அவர்களுக்கு நிதியுதவி அளித்தோர் குறித்தும் விசாரித்து வருகிறோம்.
அடைக்கலம் தந்தவர்கள்
பயங்கரவாதிகளில் ஒருவர், சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். வேலை தேடி தான் அந்த நாடுகளுக்குச் சென்றதாக, வாக்குமூலம் அளித்துள்ளார்.
இருப்பினும், பயங்கரவாதிகள் மூவரின் வெளிநாட்டு தொடர்புகள் குறித்து, தீவிர விசாரணை நடந்து வருகிறது.
பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்த ஆப்பரேஷன் முடிந்து விட்டதாக கூற முடியாது. தலைமறைவாக இருந்த ஆண்டுகளில், பயங்கரவாதிகள் தமிழகம் வந்து சென்றனரா; யாரையெல்லாம் சந்தித்தனர்; அடைக்கலம் கொடுத்த நபர்கள் குறித்தும் விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.