ரவுடி கருக்கா வினோத் வழக்கு கோர்ட்டில் டி.ஜி.பி., சாட்சியம்
ரவுடி கருக்கா வினோத் வழக்கு கோர்ட்டில் டி.ஜி.பி., சாட்சியம்
ADDED : ஜூலை 26, 2025 12:58 AM
பூந்தமல்லி:கவர்னர் மாளிகை மீது, ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில், டி.ஜி.பி., சந்தீப்ராய் ரத்தோட் நேற்று ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
கடந்த, 2023, அக்., 25ல், சென்னை கிண்டியில் உள்ள, கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இது தொடர்பாக, கிண்டி போலீசார், நந்தனம் எஸ்.எம்.நகரைச் சேர்ந்த ரவுடி கருக்கா வினோத், 42, என்பவரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இவரின் பின்னணியில் பயங்கரவாதிகள் இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால் இந்த வழக்கு, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் விசாரணையில் உள்ளது.
அவர்கள், கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரித்துள்ளனர். இவர் மீது, 680 பக்கத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், வெடிகுண்டுகள் மற்றும் பயங்கரவாதிகள் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு, கருக்கா வினோத் நேற்று அழைத்து வரப்பட்டார்.
அதேபோல, சம்பவம் நடந்த ஆண்டில், சென்னை போலீஸ் கமிஷனராக இருந்தவரும், தற்போது, ஊனமாஞ்சேரியில் உள்ள, காவல் உயர் பயிற்சியக இயக்குநராக உள்ள, டி.ஜி.பி., சந்தீப் ராய் ரத்தோட் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இவர், நீதிபதி மலர்விழி முன், கருக்கா வினோத், கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக, விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து, ஒரு மணி நேரம் சாட்சியம் அளித்துச் சென்றார்.