தனுஷ்கோடி - தலைமன்னார் பாலம்: மத்திய அரசுக்கு தமிழகம் கடிதம்
தனுஷ்கோடி - தலைமன்னார் பாலம்: மத்திய அரசுக்கு தமிழகம் கடிதம்
ADDED : ஜன 10, 2025 11:45 PM
சென்னை:“ராமேஸ்வரம் அருகேயுள்ள தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னார் வரை பாலம் கட்ட, மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும்,” என, அமைச்சர் வேலு கூறினார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
துணை சபாநாயகர் பிச்சாண்டி: மும்பையில் உள்ள அடல் சேது பாலம் போன்று, தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு பாலம் அமைக்க அரசு முன்வருமா?
அமைச்சர் வேலு: இலங்கையில் உள்நாட்டு போர் பாதிப்பு காரணமாக, பாலம் இணைக்கும் திட்டம் கனவாக இருந்தது. 2015ம் ஆண்டு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வந்த போது, ராமேஸ்வரம் அருகேயுள்ள தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை சுரங்கப்பாதை அமைக்கலாம் என, இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டது; அதற்கு இலங்கை மறுப்பு தெரிவித்தது; அந்த திட்டம் கைவிடப்பட்டது.
இந்த சூழலில் நானும், நெடுஞ்சாலைத்துறை செயலர் மற்றும் அதிகாரிகளும், தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு சென்ற போது, பாலம் கட்டலாமா, கப்பல் விடலாமா என ஆய்வு செய்தோம். தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார், 23 கி.மீ., துாரத்தில் உள்ளது.
கடந்த 2023 ஜூலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வந்த போது, பாலம் அமைக்கும் திட்டம் முன்மொழியப்பட்டது. பாலம் அமைப்பது இரண்டு நாடு சம்பந்தப்பட்ட பிரச்னை. முதல்வர் அனுமதி பெற்று, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கடிதம் எழுதப்படும்.
தி.மு.க., - சிவகாமி சுந்தரி: கிருஷ்ணராயபுரம் தொகுதி, மேலப்பாளையத்தில் இருந்து கோயம்பள்ளி இடையே அமராவதி பாலம் கட்டப்பட்டுள்ளது. இருபுறமும் அணுகுசாலை அமைத்து, பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
அமைச்சர் வேலு: விரைவில் அணுகுசாலை அமைக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

