தமிழக அரசியலில் அனலை கிளப்பிய தர்மேந்திர பிரதான் பிப்.28ல் சென்னை வருகை
தமிழக அரசியலில் அனலை கிளப்பிய தர்மேந்திர பிரதான் பிப்.28ல் சென்னை வருகை
ADDED : பிப் 21, 2025 06:11 AM

சென்னை : பல்கலை துணை வேந்தர்கள் நியமனத்திற்கு புதிய விதிகள் உருவாக்கம், மும்மொழி கொள்கையில் கண்டிப்பு என, தமிழக அரசியலில் திடீர் சூட்டை கிளப்பியுள்ள, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பிப்., 28ல் சென்னை, ஐ.ஐ.டி., வரவுள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி அளித்த பேட்டி:
தேசிய கல்வி தரவரிசையில், முதல், 50 இடங்களைப் பிடித்த தொழில்நுட்ப நிறுவனங்களின் கண்டுபிடிப்பாளர்களை, முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் துறையினருடன் இணைக்கும் முயற்சியாக, கடந்த இரண்டாண்டுகளாக, 'இன்வென்டிவ் - 2025' என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சென்னை ஐ.ஐ.டி.,யில், இந்த நிகழ்ச்சி பிப்., 28ம் தேதியும், மார்ச் 1ம் தேதியும் நடக்க உள்ளது. இதை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் துவக்கி வைக்க உள்ளார்.
இதில் பங்கேற்க 262 கண்டுபிடிப்பாளர்கள் விண்ணப்பித்த நிலையில், 186 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இருந்து, சென்னை ஐ.ஐ.டி., திருச்சி என்.ஐ.டி., வி.ஐ.டி., - எஸ்.ஆர்.எம்., மற்றும் அமிர்தா உள்ளிட்ட நிறுவனங்களின் கண்டுபிடிப்புகள் இடம் பெறுகின்றன. நாட்டின், 250 முன்னணி நிறுவனங்களும், 100க்கும் மேற்பட்ட 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்களும் பங்கேற்க உள்ளன. செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் தொழில்நுட்பங்கள் சர்ந்த, 19 கண்டுபிடிப்புகளும் இடம் பெறுகின்றன.
இந்த நிகழ்ச்சி, தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பை வழங்கும். நிகழ்ச்சியில், நாட்டின் மிக முக்கிய தொழில் துறையினரும் கல்வியாளர்களும் பங்கேற்பதால், பொது மக்கள், மாணவர்களுக்கு அனுமதி இல்லை. இவ்வாறு கூறினார்.