ADDED : ஆக 31, 2011 11:59 PM

திண்டுக்கல் : திண்டுக்கலில் வெறி பிடித்த குதிரை கடித்து, ஏழு பேர் காயம் அடைந்தனர்.திண்டுக்கல், சின்னாளபட்டியில் முன்பு, குதிரை வண்டிகள் அதிகம்.
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே குதிரை லாயம், நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டது. ஆட்டோக்களின் அணிவகுப்பால், குதிரை வண்டி தொழில் முடங்கியது. குதிரை வளர்த்தவர்கள் அனாதையாக விட்டதால், அவை தெருவில் சுற்றித்திரிகின்றன. இதில், வெறி பிடித்த குதிரை ஒன்று, நேற்று, திண்டுக்கல் சிலுவத்தூர் ரோட்டில் நடந்து சென்ற மக்களை கடித்துக் குதறியது. ரம்ஜான் தொழுகை முடித்து வந்தவர்கள் மிரண்டு ஓடினர். குதிரை கடித்து, ரவுண்ட் ரோடு ரகுமான், பாண்டியன், அனார்கலி உட்பட ஏழு பேர் காயம் அடைந்தனர். பின், அதை சிலர் விரட்யடித்தனர். அப்பகுதியினர் கூறுகையில், ''இரு நாட்களாக, குதிரை கடிக்கிறது. நகராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. குதிரையை அடித்தால், பிராணிகள் சங்கம் நடவடிக்கை எடுக்கிறது,'' என்றனர்.